Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ அதிக புரதச்சத்து உணவை தவிருங்கள்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

அதிக புரதச்சத்து உணவை தவிருங்கள்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

அதிக புரதச்சத்து உணவை தவிருங்கள்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

அதிக புரதச்சத்து உணவை தவிருங்கள்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

ADDED : மார் 22, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
சென்னை: 'கோடை வெயில் தாக்கம் அதிகரிக்கத் துவங்கி இருப்பதால், அதிக புரத சத்து உணவுகளை தவிர்க்க வேண்டும்' என, பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் துவங்கி, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 'பெரும்பாலான பகுதிகளில், வரும் நாட்களில், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் பாதிப்புகளில் இருந்து, பொதுமக்கள் தற்காத்துக் கொள்வது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு:

சூடான, வறட்சியான, சிவந்த சருமம், உடல் வெப்பநிலை அதிகரித்தல், குமட்டல், வாந்தி, கடுமையான தலைவலி, சோர்வு, கால் பிடிப்பு, மூச்சுத்திணறல், நெஞ்சு படப்படப்பு, தலைசுற்றல், மயக்கம், பதற்றம் ஆகியவை இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள்.

உடனடியாக, தண்ணீர் குடிக்க வேண்டும். ஓய்வு அவசியம். குளிர்ச்சியான பகுதிக்கு செல்ல வேண்டும். முடிந்தால் குளிர்ந்த நீரில் குளிப்பது அவசியம்.

கால் சதைப்பிடிப்பு ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தால், மயக்க நிலை போன்றவை இருந்தால், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, மருத்துவமனையில் சேர வேண்டும்.

நண்பகலில் கடுமையான பணிகள் செய்யாதீர். மதிய நேரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களின் அருகே, குழந்தைகள், செல்லப்பிராணிகளை விட்டுச் செல்ல வேண்டாம்.

செயற்கை குளிர்பானங்கள், காபி, டீ, மது அருந்தாதீர். நண்பகல் நேரங்களில் சமைப்பதை தவிருங்கள். அதிக புரதச்சத்து உணவு மற்றும் காலாவதியான உணவுகளை தவிருங்கள்.

கோடை வெயிலில் பாதிக்கப்பட்டவருக்கு அருகில் இருப்போர், அவரை குளிர்ந்த இடம் அல்லது காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று, படுக்க வைக்க வேண்டும்.

அவரின் உடைகளின் மேல் குளிர்ந்த நீரை ஊற்றவும். அவருக்கு விசிறி விடுவதுடன், குளிர்ந்த நீரை பருக கொடுத்து, ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us