டில்லி உஷ்ஷ்ஷ்: விவசாயிகளை கைவிட்ட கெஜ்ரிவால்
டில்லி உஷ்ஷ்ஷ்: விவசாயிகளை கைவிட்ட கெஜ்ரிவால்
டில்லி உஷ்ஷ்ஷ்: விவசாயிகளை கைவிட்ட கெஜ்ரிவால்
ADDED : மார் 23, 2025 12:37 AM

புதுடில்லி: பஞ்சாப் விவசாயிகள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஷம்பு என்ற இடத்தில் கடந்த 400 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பஞ்சாப் -- ஹரியானா எல்லையில் இந்த இடம் உள்ளது. ஆனால், விவசாயிகளை பஞ்சாப் போலீசார் மார்ச் 19ல் திடீரென அப்புறப்படுத்தி, அங்குள்ள 'டென்ட்'களை அகற்றிவிட்டனர். இந்த போராட்டத்தால், பஞ்சாப் - -ஹரியானா எல்லை கடந்த 400 நாட்களாக மூடப்பட்டிருந்தது; இப்போது அது திறக்கப்பட்டுவிட்டது.
இதுவரை இந்த போராட்டத்தை ஆதரித்து வந்த, பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு, திடீரென ஆதரவை விலக்கிக் கொண்டது; இதற்கு காரணம் உள்ளது. டில்லி சட்டசபை தேர்தலில், புதுடில்லி தொகுதியில் தோற்றுப்போன அரவிந்த் கெஜ்ரிவால், எப்படியாவது பார்லிமென்டில் ராஜ்யசபா எம்.பி.,யாக துடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது, கெஜ்ரிவால் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள சஞ்சீவ் அரோரா, தன் பதவியை ராஜினாமா செய்தால், கெஜ்ரிவால் எம்.பி.,யாக வாய்ப்பு கிடைக்கும்; ஆனால், சஞ்சீவ் எப்படி தன் பதவியை விட்டுக் கொடுப்பார்?
பஞ்சாபின் லுாதியானா மேற்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது; இந்த தொகுதிக்கு, ஆம் ஆத்மி வேட்பாளராக சஞ்சீவ் அரோரா அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கு, அவர் வெற்றி பெற்றால், 'அமைச்சர் பதவி நிச்சயம்' என, கெஜ்ரிவால் ஆசை காட்டி உள்ளார்.
ஆனால், 'இந்த தொகுதியில் வெற்றி பெறுவது சுலபம் அல்ல. விவசாயிகள் தர்ணாவால், எங்கள் பிசினஸ் படுத்துவிட்டது. எனவே, போராட்டம் முடிவிற்கு வந்தால்தான், எங்கள் வாழ்வாதாரம் நிலைப்படும். எனவே, ஆம் ஆத்மிக்கு நாங்கள் ஆதரவு தர முடியாது' என கெஜ்ரிவாலிடம், இங்குள்ள வியாபாரிகள் சங்கத்தினர் கறாராக சொல்லிவிட்டனர்.
அதேபோல, இங்குள்ள தொழிலதிபர்களும், 'பஞ்சாப் - -ஹரியானா எல்லை மூடப்பட்டிருப்பதால், எங்கள் தொழிலும் அடிவாங்கி விட்டது' என, புகார் அளித்துள்ளனர். இதையெல்லாம் பார்த்த கெஜ்ரிவால், 'விவசாயிகள் போராட்டத்தை நிறுத்தினால் தான், நான் ராஜ்யசபா எம்.பி.,யாக முடியும்' என்ற முடிவிற்கு வந்துவிட்டார். இதனால் தான், விவசாயிகள் போராட்டத்தை ஒழித்துக் கட்டிவிட்டார்.
'விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் தாலிவாலை போராட்ட இடத்திலிருந்து வெளியேற்றுங்கள்' என, பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 'அப்படி செய்தால் பெரும் பிரச்னை ஏற்படும்' என தெரிவித்த பஞ்சாப் அரசு, இப்போது, 20 நிமிடத்தில் போராட்டத்தையே நிறுத்தியிருக்கிறது.