பிரியங்காவை செயல் தலைவராக்க தமிழக காங்., நிர்வாகிகள் கடிதம்
பிரியங்காவை செயல் தலைவராக்க தமிழக காங்., நிர்வாகிகள் கடிதம்
பிரியங்காவை செயல் தலைவராக்க தமிழக காங்., நிர்வாகிகள் கடிதம்
ADDED : ஜூலை 27, 2024 01:46 AM

மஹாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட சில மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க, காங்கிரசின் இடைக்கால தலைவர் அல்லது செயல் தலைவராக பிரியங்காவை நியமிக்குமாறு, மேலிடத்திற்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கு முன், காங்கிரஸ் தலைவர் கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, வட மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரசார் விரும்பவில்லை.
தற்போது, காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், வயது முதிர்வு காரணமாக கார்கேவால் திறம்பட செயல்பட முடியாது. அதனால், கட்சியின் இடைக்கால தலைவர் அல்லது செயல் தலைவராக பிரியங்காவை நியமிக்க வேண்டும்.
இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள மஹாராஷ்டிரா, ஹரியானா போன்ற சில மாநிலங்களின் சட்டசபை தேர்தலை, கார்கே தலைமையில் சந்தித்தால், அம்மாநிலத்தில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, இடைக்கால தலைவர் அல்லது செயல் தலைவராக பிரியங்காவை நியமித்து தேர்தலை சந்தித்தால், அம்மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.
ராகுல் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால், வட மாநிலங்களில் அவரது தலைமையிலும், தென் மாநிலங்களில் பிரியங்கா தலைமையிலும் கட்சியை வழிநடத்த முடியும் என, தமிழக காங்கிரசைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர், சோனியா, ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -