200 ரவுடிகள் எங்கே? தேடுகிறது போலீஸ்!
200 ரவுடிகள் எங்கே? தேடுகிறது போலீஸ்!
200 ரவுடிகள் எங்கே? தேடுகிறது போலீஸ்!
ADDED : ஜூலை 26, 2024 06:48 AM

சென்னை: நீதிமன்றங்களால் 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்ட, 200க்கும் மேற்பட்ட ரவுடிகள், கூலிப்படையினர் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்குமாறு, கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.
முன்பு, சென்னை அயோத்தியாகுப்பம் வீரமணி, வெள்ளை ரவி, 'பங்க்' குமார், சின்னத்தம்பி, திண்டுக்கல் பாண்டி என, தாதாக்கள் இருந்தனர். இவர்களை, 'என்கவுன்டர்' நடவடிக்கை வாயிலாக, போலீசார் சுட்டுக் கொன்றனர். தற்போது, இளம் ரவுடிகள் உருவாகி விட்டனர். போலீசாரால் அடையாளம் காண்பதற்குள், குறைந்தது இரண்டு கொலைகளாவது செய்து விடுகின்றனர்.
சமீபத்தில், சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார். இது காவல் துறைக்கு கரும்புள்ளியை உருவாக்கி விட்டது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர்.
மேலும் அசம்பாவித சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, ரவுடிகள் மற்றும் கூலிப்படையினர் மீது போலீசார் தீவிரமாக கவனம் செலுத்த துவங்கி உள்ளனர். பழைய குற்றவாளிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
அத்துடன், கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமினில் வெளிவந்தவர்கள் குறித்த பட்டியலையும் தயாரித்துள்ளனர். இவர்களில், 200க்கும் மேற்பட்ட ரவுடிகள், கூலிப்படையினர் மற்றும் இதர குற்றவாளிகள், விசாரணைக்கு ஆஜராகாததால், நீதிமன்றங்களால் 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டும் தலைமறைவாக உள்ளனர்.
இவர்களை, 15 நாளில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என, போலீசாருக்கு மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கமிஷனர்கள் கூறுகையில், 'பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய, காவல் நிலையங்கள் தோறும், எஸ்.ஐ.,க்கள் தலைமையில் ஐந்து போலீசார் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கண்காணித்து கைது செய்யும் முழு நேர பணி ஒதுக்கப்பட்டுள்ளது' என்றனர்.