Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ தமிழகத்தில் ஜனசேனா கட்சியை துவக்க ஆந்திரா பவன் கல்யாண் ஆலோசனை

தமிழகத்தில் ஜனசேனா கட்சியை துவக்க ஆந்திரா பவன் கல்யாண் ஆலோசனை

தமிழகத்தில் ஜனசேனா கட்சியை துவக்க ஆந்திரா பவன் கல்யாண் ஆலோசனை

தமிழகத்தில் ஜனசேனா கட்சியை துவக்க ஆந்திரா பவன் கல்யாண் ஆலோசனை

ADDED : மார் 25, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
ஆந்திரா துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், தமிழகத்தில் தன் கட்சியை துவக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண், கடந்த 2014ல் ஆந்திர மாநிலத்தில் ஜனசேனா கட்சியை துவக்கினார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கூட்டணி அரசில் பங்கேற்று, துணை முதல்வரானார்.

அடுத்து, தமிழகத்தில் ஜனசேனா கட்சியை வளர்க்க பவன் கல்யாண் விரும்புகிறார். குறிப்பாக, தி.மு.க., எதிர்ப்பு அரசியலை, அவர் கையில் எடுத்துள்ளார். ஏற்கனவே துணை முதல்வர் உதயநிதி, சனாதனத்தை எதிர்த்து பேசியதை கடுமையாக கண்டித்தார். 'சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது; ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன். நீங்கள் தான் அழிந்து போவீர்கள்' என, தி.மு.க.,வினருக்கு சாபமிட்டார்.

மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறார். 'தமிழக அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்ய கூறிவிட்டு, ஹிந்தியை எதிர்ப்பது ஏன்? ஹிந்தி தயாரிப்பாளர்கள் பணம் மட்டும் வேண்டும்; ஹிந்தி வேண்டாமா?' என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டுகள் கணிசமாக உள்ளன. இங்கு கட்சியை விரிவுபடுத்தினால், அந்த ஓட்டு வங்கியை பெற முடியும். இது, கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்பது பவன் கல்யாண் கணக்காக உள்ளது. தமிழகத்தில் கட்சி துவக்குவது தொடர்பாக, தி.மு.க.,விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் தெலுங்கு சமுதாயத்தின் முக்கிய தலைவர்களிடம், பவன் கல்யாண் தரப்பினர் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

பங்கேற்கவில்லை


தொகுதி மறுவரையறை தொடர்பாக, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க, ஜனசேனா எம்.பி., உதய் ஸ்ரீனிவாசிற்கு தி.மு.க., அழைப்பு விடுத்தது. அதை ஏற்று, அவர் சென்னை வந்தார். அவரை, தி.மு.க., - எம்.பி., வில்சன் வரவேற்றார். நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்.

பா.ஜ., கூட்டணியில் ஜனசேனா இருப்பதால், தி.மு.க., கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என, கூட்டம் நடப்பதற்கு முன்தினம் இரவில் உதய் ஸ்ரீனிவாசிற்கு பவன் கல்யாண் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் அக்கூட்டத்தில் பங்கேற்காமல் ஆந்திரா புறப்பட்டு சென்றார். ஆனால், அவர் பங்கேற்றதாக செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என, பவன் கல்யாணின் அரசியல் செயலர் ஹரிபிரசாத் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


சென்னையில் நடந்த தொகுதி மறுவரையறை குறித்த கூட்டத்தில் பங்கேற்க, ஜனசேனா கட்சிக்கு அழைப்பு வந்தது. அக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என, நாங்கள் தெரிவித்து விட்டோம். ஜனசேனா பங்கேற்றதாக வெளியான செய்திகள், யூகத்தின் அடிப்படையில் வெளியானவை. வெவ்வேறு கூட்டணிகளாக இருப்பதால், கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தொகுதி மறுவரையறை தொடர்பாக, எங்கள் கட்சியின் கொள்கையை அதிகாரப்பூர்வமாக மேடையில் வெளிப்படுத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us