தெரு நாய்களை கட்டுப்படுத்தும் விவகாரம்; மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்பார்ப்பு
தெரு நாய்களை கட்டுப்படுத்தும் விவகாரம்; மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்பார்ப்பு
தெரு நாய்களை கட்டுப்படுத்தும் விவகாரம்; மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்பார்ப்பு
ADDED : மார் 25, 2025 01:27 AM

திருப்பூர்: தெரு நாய்களை கட்டுப்படுத்தும் விவகாரத்தில், மத்திய அரசு சரியான கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை, விவசாயிகள் முன்வைக்கின்றனர்.
'நாட்டில், கடந்தாண்டு (2024) 22 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர்' என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் மட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் ஆடு, கோழி, மாடு ஆகியவற்றையும் தெரு நாய்கள் கடிக்கின்றன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தெரு நாய்களின் கடிக்கு பலியான ஆடு, கோழிகளின் எண்ணிக்கை ஏராளம்.'நாய்கடிபட்டு இறக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என்ற விவசாயிகளின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து, மாநில அரசு, நாய் கடிபட்டு இறக்கும் ஆடுகளுக்கு, 6,000 ரூபாய், கோழிகளுக்கு, 200, மாடுகளுக்கு, 37,500 ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அரசாணைக்கு விவசாயிகள் காத்துள்ள நிலையில், தெரு நாய்கள் விவகாரத்தில் நாடு முழுக்க நிலவும் பிரச்னைக்கு, தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.விலங்குகளுக்காக ஏ.பி.சி., எனப்படும் விலங்கு கருத்தடை, பிராணிகள் நல வாரியம் உள்ளிட்டவை மத்திய அரசின் கண்காணிப்பில் இருப்பதால், தெருநாய்கள் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் வெள்ளகோவில் பி.ஏ.பி., கிளைக்கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:மாநில அரசு இழப்பீடு அறிவித்தது வரவேற்கத்தக்கது.
அரசாணை வெளியிடுவதற்கு முன், எங்களின் எதிர்பார்ப்பை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். விலங்கு கருத்தடை திட்டம், விலங்கு நல வாரியம், பிராணிகள் வதை தடுப்புச்சட்டம் என, விலங்குகள் நலன்சார்ந்த சட்ட திட்டங்களை கையாளும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது என்ற நிலையில், இவ்விவகாரத்தில் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை என்பது ஏற்புடையதல்ல; அதற்கான கட்டமைப்பு, மருத்துவர்கள் போதியளவில் இல்லை.
மாறாக, தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். அதற்கேற்றவாறு, மத்திய அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என, மத்திய கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோரை சந்தித்து முறையிட உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.