வீடுகளில் மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு; 6 மாதத்தில் அமல்படுத்த வாரியம் தீவிரம்
வீடுகளில் மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு; 6 மாதத்தில் அமல்படுத்த வாரியம் தீவிரம்
வீடுகளில் மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு; 6 மாதத்தில் அமல்படுத்த வாரியம் தீவிரம்
ADDED : மார் 25, 2025 01:34 AM

சென்னை: வீடுகளில் மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் திட்டத்தை, ஆறு மாதங்களுக்குள் செயல்படுத்தும் வகையில், மின் வாரியம் துரித நடவடிக்கைளை மேற்கொண்டுஉள்ளது.
தமிழகத்தில் வீடுகளுக்கு, 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது.
பேச்சு தாமதம்
சில ஊழியர்கள் தாமதமாக கணக்கெடுப்பது, நேரில் செல்லாமல் உத்தேசமாக கணக்கெடுப்பது உள்ளிட்ட செயல்களால், அரசின் சலுகைகளை பெற முடிவதில்லை. எனவே, மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் திட்டத்தை செயல்படுத்துமாறு, பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும்' என, 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. இத்திட்டம், இதுவரை செயல்பாட்டிற்கு வராத நிலையில், சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது.
எனவே, மாதந்தோறும் மின் பயன்பாட்டு கணக்கெடுப்பை, அடுத்த ஆறு மாதங்களுக்குள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, மின்வாரியத்திற்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டு உள்ளார்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாதந்தோறும் மின் பயன்பாட்டு கணக்கெடுப்பை, 2024 முதல் நடைமுறைக்கு கொண்டு வர, 'ஸ்மார்ட்' மீட்டர் திட்ட பணிக்கு, 2023ல், 'டெண்டர்' கோரப்பட்டது. அதில் பங்கேற்ற நிறுவனங்கள், புதுச்சேரியில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கு குறைந்த விலை புள்ளி வழங்கிய நிலையில், தமிழகத்தில் அதை விட அதிக விலை புள்ளி வழங்கின. இதனால், விலை குறைப்பு பேச்சு தாமதமானது.
இருப்பினும், எதிர்பார்த்த விலை கிடைக்காததால், ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதில், தாமதம் ஏற்படவில்லை எனில், தற்போது, ஸ்மார்ட் மீட்டர் செயல்பாட்டிற்கு வந்திருக்கும்.
ஏப்., 17 கடைசி நாள்
தற்போது, 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் திட்டத்திற்கு டெண்டர் கோரப்பட்டு உள்ளது. அதில், நிறுவனங்கள் பங்கேற்க, ஏப்ரல், 17 கடைசி நாள். அது, நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை.
டெண்டர் ஆவணங்களை விரைந்து சரிபார்த்து, மூன்று - நான்கு மாதங்களுக்குள் தகுதியான நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கி, மாதம்தோறும் கணக்கெடுப்பு திட்டத்தை, ஆறு மாதங்களுக்குள் செயல்படுத்துமாறு, துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டு உள்ளார். அதற்கு ஏற்ப பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.