கட்சிக்கு புதிய தேசிய தலைவர் யார்? ஆவலுடன் எதிர்பார்க்கும் பா.ஜ.,வினர்
கட்சிக்கு புதிய தேசிய தலைவர் யார்? ஆவலுடன் எதிர்பார்க்கும் பா.ஜ.,வினர்
கட்சிக்கு புதிய தேசிய தலைவர் யார்? ஆவலுடன் எதிர்பார்க்கும் பா.ஜ.,வினர்
ADDED : ஜூன் 12, 2024 02:37 AM

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மத்திய அமைச்சராகி விட்டதால், அவருக்கு பின், கட்சியை வழிநடத்தப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலை தொடர்ந்து, பா.ஜ., செயல் தலைவராக நட்டா நியமிக்கப்பட்டார்.
பா.ஜ., தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, 2020 ஜனவரியில், பிரதமர் மோடியின் அமைச்சரவையில், உள்துறை அமைச்சராக பதவியேற்றதும், முழு நேர தலைவராக, நட்டா பொறுப்பேற்றார்.
ராஜினாமா
இவரது மூன்று ஆண்டு பதவிக் காலம், கடந்த ஜன., 20ல் முடிவடைந்தது. எனினும், லோக்சபா தேர்தலை கருதி, ஜூன் மாதம் வரை பதவிக்காலத்தை நீட்டித்து, பா.ஜ., தேசிய செயற்குழு உத்தரவிட்டது.
இந்நிலையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 240 இடங்களில் வெற்றி பெற்று, பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
தே.ஜ., கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், பிரதமர் மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
இவரது தலைமையிலான அமைச்சரவையில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவுக்கு, சுகாதாரத் துறை ஒதுக்கப்பட்டுஉள்ளது. இதன்படி நேற்று, அமைச்சராக அவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
பா.ஜ.,வின் கட்சி விதிகளின்படி, ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், தற்போது மத்திய அமைச்சராகி இருக்கும் நட்டா, கட்சியின் தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நட்டாவுக்கு பின், பா.ஜ., தேசிய தலைவராக நியமிக்கப்படப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கான போட்டியில், பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பலர் உள்ளனர்.
பா.ஜ., தேசிய பொதுச் செயலர் வினோத் தாவ்டே, தலைவர் பதவிக்கான பந்தயத்தில் முன்னணியில் உள்ளார்.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், கட்சி தேசிய பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷுக்கு பின், முக்கிய பிரபலமாக உள்ளார்.
போட்டி
ஹமிர்பூர் தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்றாலும், இந்த முறை, அனுராக் தாக்குருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவரும், பா.ஜ., தேசிய தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளார்.
இதே போல், பா.ஜ., - ஓ.பி.சி., பிரிவு தலைவர் கே.லக் ஷ்மண், கட்சி தேசிய பொதுச் செயலர் சுனில் பன்சால் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
இதுதவிர, ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,யும், பைரோன் சிங் ஷெகாவத்தின் ஆதரவாளருமான ஓம் மாத்துாரும், பா.ஜ., தேசிய தலைவர் பதவிக்கான போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பா.ஜ., புதிய தலைவர் யார் என்பது விரைவில் தெரிந்து விடும் என்கின்றனர், விபரம் அறிந்தவர்கள்.
- நமது சிறப்பு நிருபர் -