Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/அதிகரிக்கும் எத்தனால் உற்பத்தி: மக்காச்சோளத்துக்கு நல்ல விலை உறுதி

அதிகரிக்கும் எத்தனால் உற்பத்தி: மக்காச்சோளத்துக்கு நல்ல விலை உறுதி

அதிகரிக்கும் எத்தனால் உற்பத்தி: மக்காச்சோளத்துக்கு நல்ல விலை உறுதி

அதிகரிக்கும் எத்தனால் உற்பத்தி: மக்காச்சோளத்துக்கு நல்ல விலை உறுதி

UPDATED : ஜூன் 12, 2024 01:41 PMADDED : ஜூன் 12, 2024 07:59 AM


Google News
Latest Tamil News
எத்தனால் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும் நிலையில், அதன் மூலப் பொருளான மக்காச்சோளத்துக்கு நிரந்தரமாக நல்ல விலை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. தண்ணீருக்காக அண்டை மாநிலங்களுடன் சண்டையிடும் நிலையில் வற்றாத ஜிவ நதிகளும் அதிகமில்லாத தமிழகத்தில், விவசாயிகளுக்கு தண்ணீர்தான் பெரும் பிரச்னையாக உள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு மழை பெய்யும் நாட்கள் குறைந்து பெருவெள்ளம் அல்லது வறட்சி என்ற இருவேறான சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இதன்காரணமாக நஞ்சை விவசாயம் நலிந்து வருகிறது.

மக்கள் தொகை அதிகரிப்பு, நகர மயமாக்கல், தொழில் தேவைகள் ஆகிய காரணங்களால் அணைகளில் தேக்கப்படும் தண்ணிர், பெருமளவில் குடிநீர், மின் உற்பத்தி போன்றவற்றுக்குப் பயன்படுத்த வேண்டியுள்ளது. வேறு வழியின்றி தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பயிர்களை பயிரிட வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். அந்தவகையில், எந்தப் பயிரைப் பயிரிட்டால், நிரந்தர வருவாய் பார்க்கலாம் என்பதைக் கண்டறிவதில், விவசாயிகளிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. தற்போதைய சூழ்நிலையில் கரும்பு, நெல்போன்றவற்றுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும்; எனவே, சிறுதானியங்களைப் பயிரிடுவது, அறிவுப்பூர்வமான அணுகுமுறையாகக் கருதப்படுகிறது.

அதிலும் மக்காச் சோளம் பயிரிடுவோருக்கு நிலையான நீடித்த வரு வாய் கிடைப்பதற்கான சூழல் உருவாகி வருகிறது. ஏற்கனவே கோழித் தீவனம், ஸ்டார்ச், உணவு போன்றவற்றுக்காக மக் காச்சோளம் பெருமளவில் தேவைப்படும் நிலையில், இப்போது மத்திய, மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளால், எத்தனால் உற்பத்தியிலும் இதன் பங்களிப்பு அதிகரித்துள்ளது.

எத்தனால் கலக்க மத்திய அரசு முடிவு


இந்தியாவில், கரும்பு ஆலைகளில், சர்க்கரை தயாரிப்பிற்கு பின் வெளியேறும், 'மொலா சஸ் கழிவில் இருந்து எத்தனால் தயாரிக்கப்பட்டது. அதன்பின் உட்கொள்ள தகுதியற்ற மட்டரக அரிசி மற்றும் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு, பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலை கலக்க மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்தது. இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 10 சதவீத எத்தனால் கலப்பையே சாதிக்க முடிந்திருக்கிறது. எத்தனால் கலப்பதினால் பெட்ரோல் விலையை காட்டிலும் 2 ரூபாய் குறைத்து வழங்கிட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. எரிபொருள் இறக்குமதியைக் குறைப்ப தன் வாயிலாக அந்நியச்செலாவணி சேமிக்கப்படும். அதை, நமது நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும்; இந்தியா தன்னிறைவை நோக்கி முன்னேறும்.

குறுகியகால பயிரான மக்காச்சோளத்துக்கு மிகக்குறைவான தண்ணீரே தேவைப்படுவதால், விவசாயிகள் தொடர்ச்சியான வருமானம் பெற முடியும்.எத்தனால் உற்பத்தியானது 'பசுமை ஆற்றல்' மற்றும் மிகக்குறைந்த கார்பன் உமிழ்வு கொண்டது; சுற்றுச் சூழலுக்கு உகந்தது. மக்காச்சோளம் மற்றும் நாம் உட்கொள்ளத் தகுதியற்ற மட்டரக அரிசியை எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்துவதன் வாயிலாக, விவசாயிகள் நல்ல வரு வாயை பெற முடியும். இதன்காரணமாகவே பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை மத்திய அரசு ஊக்குவிக்கிறது.

அரிசி, சோளத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய இயலாது.எனவே, தற்போதைய சூழலில் தண்ணீர் தேவை குறைவான மக்காச்சோளம் பயிரிடுவோருக்கு நிச்சயம் நல்ல வருவாய் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக வேளாண் நிபுணர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். தமிழகத்தில், 10.75 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆடிப்பட்டத்தில் 5.75 லட்சம் ஏக்கர் பரப்பிலும், வடகிழக்கு பருவ மழை சமயங்களில் 5லட்சம் ஏக்கர் பரப்பிலும் சாகுபடி செய்யப்படுகிறது.

தண்ணீர் தேவை குறைவு


தமிழகத்தை பொறுத்தவரையில், பரவலாக அனைத்து இடங்களிலும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டாலும், பெரம்பலுார், துாத்துக்குடி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், சேலம் ஆகிய இடங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நீர் ஆதாரம் அதிகமில்லாத இப்பகுதிகளில் இவை அதிகம் விளைவதே, இதன் தண்ணீர்த் தேவை குறைவு என்பதற்கு முக்கிய ஆதாரமாகும். தற்போது, தமிழகத்தில் ஆண்டுதோறும், 30 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், தேவை, 45 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது. மேலும், எத்தனால் உற்பத்தி நிறுவனங்கள் வரவால், இதன் தேவை இந்த வருடம் மட்டுமே 7 லட்சம் முதல் 10 லட்சம் டன் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது: பிற பயிர்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு மக்காச்சோளத்திற்கு உள்ளது. அதாவது, கன்னியாகுமரி முதல் மேலே காஷ்மீர் வரை அனைத்து இடங்களிலும் இதனை சாகுபடி செய்ய இயலும். அனைத்து சீதோஷ்ண நிலையிலும் இதனை சாகுபடி செய்யலாம். இந்திய அளவில், 350 லட்சம் டன் உற்பத்தி செய்கின்றோம்.அதன் தேவை, 2025-26 ம் ஆண்டில், 425 லட்சம் டன் ஆக இருக்கும். தமிழகத்தில், 30 லட் சம் டன் உற்பத்தி செய்கிறோம்; தற்போது, 45 லட்சம்டன் தேவை உள்ளது. தமிழகத்தில் மொத்த உற்பத்தியில், 60-65 சதவீதம் கால்நடைகளுக்கு தீவனமாகவும், 10 சதவீதம் ஸ்டார்ச் உற்பத்திக்கும், 20 சதவீதம் இதர துறைகளுக்கும், 5-7 சதவீதம் மட்டும் உணவு பயன்பாட்டுக்கும் செல்கிறது.

மக்காச் சோளம் உற்பத்தியை காட்டிலும் தேவை அதிகம் உள்ளதால், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பீகார் மாநிலங்களில் இருந்து தருவிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் மக்காச்சோளம் தேவை அதிகம் இருப்பதால், அதன் உற்பத்தி பரப்பை அதிகரிக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், 2025க்குள் பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலக்கவேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எத்தனால் உற்பத்தியின் மூலப் பொருளாக (உட்கொள்ளதகுதியற்ற) அரிசி மற்றும் மக்காச்சோளம் உள்ளதால் அதன் தேவை மேலும் அதிகரிக்கும். இதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

எத்தனால் கலப்பு


இந்தியாவில், தற்போது சில இடங்களில் பெட்ரோலுடன் எத்தனால் 10-11 சதவீதம் கலக்கப்படுகிறது. தமி ழகத்தில் புதிதாக வரும் எத்தனால் நிறுவனங்களுக்கு மட்டுமே ஆண்டுக்கு, சுமார் 10 லட்சம் டன் மக்காச்சோளம் கூடுதலாக தேவைப்படுகிறது.இந்திய அளவில் 2023ம் ஆண்டு புள்ளிவிபரங்களின் படி,தற்போது எத்தனால்உற்பத்திக்காக 8 லட்சம் டன் மக்காச்சோளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2024 -25ம்ஆண்டுகளில் 30-35லட்சம் டன் மக்காச்சோளம் பயன்படுத்தப்படும். இரண்டு ஆண்டுகளில், எத்தனால் உற்பத்திக்கு மட்டும் 100 லட்சம் டன் மககாச்சோளம் தேவைஉருவாகும் என கணிப்புகள் வாயிலாகதெரிய வருகிறது.

தற்போது, 683 கோடி லிட்டர் மட்டுமே எத்தனால் உற்பத்தி செய்துவருகிறோம். பெட்ரோலுடன், 20 சதவீதம் கலக்க வேண்டுமானால் 1100 கோடி லிட்டர் தேவைப்படும். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 15 முதல் 18சதவீதம் வரை பெட் ரோல் தேவை அதிகரிக்கிறது. அடுத்த ஆண்டு, 1100 கோடி லிட்டரில் இருந்து எத்தனால் தேவை மேலும் அதிகரிக்கும்.

ஆராய்ச்சிகள்


தமிழ்நாடு வேளாண் பல்கலை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்ச் சதவீதம் அதிகம் கொண்ட, புதிய மக்காச்சோள பயிர்களை எத்தனால் உற்பத்தியை மையமாக கொண்டு புதிய ரகம் கண்டுபிடிக்க பி.எச்டி., மாணவர்கள் வழிகாட்டுதல்கள் வழங்கி பணிகள் நடக்கின்றன.மேலும், மரவள்ளி போன்று ஸ்டார்ச் தன்மை கொண்ட வேறு பயிர்களையும் ஆராய்ச் சிக்கு அடிப்படை அளவில் உட்படுத்தியுள்ளோம். விவசாயிகள் தாராளமாக மக்காச்சோளத்தை பயிரிடலாம். அதற்கான அனைத்து வழிகாட்டுதலும் வேளாண் பல்கலையில் வழங்கப்படுகிறது. மேலும், இரண்டு போகம் மக்காச்சோளம் பயிரிட்டால் கட்டாயம் ஒரு போகம் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யவேண்டும். ஒரு ஏக்கருக்கு 2.8- 3.2 டன் உற்பத்தியை விவசாயிகள் பெற இயலும். எந்த பயிர்களாக இருப்பினும் விவசாயிகள் அப்பகுதியின் தண்ணீர் வளத்தை மையமாக கொண்டு முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்

இரு போகம் போக...

மக்காச்சோளம் இரண்டு போகம் பயிரிட்டால் மூன்றாவதாக, ஏதேனும் ஒரு பயறு வகை பயிர்களை அந்தந்த பகுதிகளின் நீர் இருப்பு, மண்வளம் காலநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகளே தேர்வு செய்து பயிரிடலாம் என்கின்றனர், வேளாண் அதிகாரிகள்.



தேவை பல மடங்கு அதிகரிக்கும்

பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை இயக்குனர் ரவிகேசவன் கூறுகையில், 'எத்தனால் உற்பத்திக்காக, மக்காச்சோளம் கொள்முதல் விலையை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், விரைவில் மக்காச்சோளம் தேவை பல மடங்கு அதிகரிக்கும். விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். தமிழகத்தில், எத்தனால் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்திக்கு தயாராகி வருகின்றன. மக்காச்சோளத்தின் தேவை அதிகரிப்பதை உணர்ந்து, தமிழக விவசாயிகள் இதை அதிகப்பரப்பில் பயிரிடும் பட்சத்தில் நிச்சயமாக நல்லதொரு விலையும், எதிர்காலமும் கிடைப்பது உறுதியிலும் உறுதியாகும்.' என்றார்.



Image 1280466

- ஜே.மாதவி-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us