உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி? காங்., பொதுக்குழுவில் கொந்தளிப்பு
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி? காங்., பொதுக்குழுவில் கொந்தளிப்பு
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி? காங்., பொதுக்குழுவில் கொந்தளிப்பு
UPDATED : ஜூன் 12, 2024 02:42 AM
ADDED : ஜூன் 12, 2024 01:03 AM

உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்பது குறித்து ஆராய்வதற்கு நடந்த தமிழக காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக கோஷ்டி தலைவர்கள் பேசியதற்கு எதிர்ப்பு வெடித்தது.
அதன் விபரம்:
தமிழக காங்கிரஸ் எஸ்.சி., துறை தலைவர் ரஞ்சன்குமார்: ராகுல் நடைபயணத்தாலும், கார்கே தலைமையாலும் தேசிய அளவில், 35 தலித் எம்.பி.,க்கள் கிடைத்துள்ளனர். இந்திரா, ராஜிவ் காலத்திற்கு பின் தலித் ஓட்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிகரித்துள்ளன. காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற முழக்கத்தை சில தலைவர்கள் விரும்பாமல் உள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதன்: சட்டசபை, லோக்சபா தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுகிறது. இந்த இரு தேர்தல்களுக்கு பணம் செலவு செய்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும்போது செலவு செய்தால், கட்சி வெற்றி பெறும். கட்சியின் கட்டமைப்பு வலுவடையும்; தொண்டர்களும் உற்சாகம் அடைவர்.
முன்னாள் தலைவர் இளங்கோவன்: தனியாக நின்றபோது, நாம் இரண்டு தொகுதிகளை தவிர அனைத்து தொகுதிகளிலும் டிபாசிட் இழந்தோம். தனியாக நிற்பேன், தனியாக தோற்பேன் என்றால் உங்கள் இஷ்டம். தனித்து நிற்போம் என்ற ஆசை இருக்கலாம்; பேராசை இருக்கக் கூடாது.
மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்: லோக்சபா தேர்தலில், 100 சதவீத வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின் உழைப்பு மகத்தானது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., கூட்டணியில், எத்தனை இடங்களை பெற வேண்டும் என்பதை முன்கூட்டி பேசுவதற்கு குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
முன்னாள் தலைவர் அழகிரி: மேடையில் பேசுவோர் அனைவரின் குரலும் ஒன்றுபோல இருக்க வேண்டும். அப்படி பேசுவதற்கு முன் நாம் அனைவரும் கலந்தாலோசிக்க வேண்டும். தலைவர்கள் தெரிவிக்கிற கருத்துக்கு, தொண்டர்கள் எதிர்ப்பு குரல் கொடுத்து விட்டு வீட்டிற்கு சென்று விடுவீர்கள். ஆனால், கட்சி தலைமையின் வழிகாட்டுதலின்படி பணிகள் தொடரத்தான் போகின்றன.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: வரும் காலங்களில் நாம் பிறரை சார்ந்து இருக்கப் போகிறோமா, சுயமாக இருக்கப் போகிறோமா என்பதை மனதில் வைத்து தலைவர்கள் பேச வேண்டும். எத்தனை காலம் சார்ந்து இருக்க போகிறோம்; நாம் எந்த திசையில் செல்கிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். கூட்டணி என்பது வேறு; சார்ந்து இருப்பது வேறு.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய தலைவர்களில் சிலர், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாகவும், முதல்வர் ஸ்டாலினை பாராட்டியும் பேசிய போது, தொண்டர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
'தேர்தல் வெற்றிக்கு ராகுல் தான் காரணம்; உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்' என சில தலைவர்கள் பேசியதை, தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு டீ, காபி, பிஸ்கட் வழங்கவில்லை என்று, காங்கிரசார் குறை கூறினர்.
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற முழக்கத்திற்கு ஒருமித்த ஆதரவு கிடைத்துள்ளதால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- நமது நிருபர் -