விளையாட்டு துறை வளர்ச்சி பற்றி உதயநிதி சிந்திக்கவில்லை: பா.ஜ.,
விளையாட்டு துறை வளர்ச்சி பற்றி உதயநிதி சிந்திக்கவில்லை: பா.ஜ.,
விளையாட்டு துறை வளர்ச்சி பற்றி உதயநிதி சிந்திக்கவில்லை: பா.ஜ.,
ADDED : ஜூலை 29, 2024 12:47 AM

சென்னை: தமிழக பா.ஜ., தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கை:
கேலோ இந்தியா பற்றி, ஆதாரமற்ற சில சர்ச்சைகளை அமைச்சர் உதயநிதி எழுப்பியுள்ளார். முதலில் கேலோ இந்தியா திட்டத்திற்கான வரைமுறைகள் பற்றி, அவர் தெரிந்திருக்க வேண்டும். மாநிலங்களின் கோரிக்கைகளின் பொருட்டே, கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படும்.
இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு நடத்தும், தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில், முதல் முறையாக தமிழகம் பங்கேற்க தவறி விட்டது. தமிழக விளையாட்டு கொள்கை கொண்டு வரப்படும் என, தி.மு.க., கொடுத்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை.
அரசு பள்ளிகளில், 1:250 - 400 என்றிருந்த ஆசிரிய மாணவர் விகிதத்தை, 1:700 என மாற்றியமைத்து, உடற்கல்வி ஆசிரியர்களை குறைக்க உத்தரவிட்டுள்ளது ஏன் என்பதை உதயநிதி விளக்க வேண்டும்.
திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியை, மாநிலத்தின் முதல் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டியாக மாற்ற வேண்டும்.
விளையாட்டு துறையின் வளர்ச்சியை பற்றி சற்றும் கவலைப்படாமல், மக்கள் வரிப்பணத்தில் கார் ரேஸ் நடத்த, உதயநிதி முட்டி மோதுகிறார்.
கடந்த 10 ஆண்டுகளில், விளையாட்டு துறையின் நலனுக்கான ஒதுக்கப்படும் நிதியில், 180 சதவீதம் அதிகரித்துள்ள பா.ஜ., அரசை கேள்வி கேட்க, அவருக்கு அருகதை இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.