ம.தி.மு.க., தனித்து போட்டியிட கடிதம்: தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு
ம.தி.மு.க., தனித்து போட்டியிட கடிதம்: தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு
ம.தி.மு.க., தனித்து போட்டியிட கடிதம்: தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு
ADDED : ஜூலை 29, 2024 12:51 AM

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல், சட்டசபை தேர்தல்களில் தனித்தன்மையுடன் வெற்றி பெற வேண்டும் என, ம.தி.மு.க., முதன்மைச்செயலர் துரைக்கு, அக்கட்சி நிர்வாகி கடிதம் அனுப்பியுள்ளனர். இந்த கடிதத்தால், தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ம.தி.மு.க., நிர்வாகி ஒருவர், துரை வைகோவுக்கு எழுதியுள்ள கடிதம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடிதத்தில் கூறப் பட்டுள்ளதாவது:
ம.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில், ஆக., 4ல் சென்னையில் நடைபெறும் என, பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.
பொதுக்குழுவில் அடித்து ஆடுவோம்; அரங்கை அதிர வைப்போம்; வெற்றி வாகை சூட நாள் குறிப்போம்.
உள்ளாட்சி தேர்தல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல், சட்டசபை தேர்தல்களில் பெரும்பான்மையான ம.தி.மு.க.,வினரை, தனித்தன்மையுடன் வெற்றி பெற வைத்து, பதவியில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும்.
இதை முதன்மை லட்சியமாக வைத்து, துரை செயல்பட்டு வருகிறார்.
இதை தடுக்க, கார்ப்பரேட் சக்திகளும், கட்சி என்கிற பெயரிலான சில நிறுவனங்களும், சிண்டு முடியும் சில்வண்டு வேலைகளை எப்போதும் போல, இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இப்போது நமக்கு உள்ள ஒரே ஆயுதம் தீப்பெட்டி. ஏனென்றால், தீப்பெட்டி எவனாக இருந்தாலும், ஏன் எமனாக இருந்தாலும் அழித்து, எரித்து சாம்பலாக்கிவிடும்.
வைகோ திரவிட இயக்க போர்வாள் என்றால், துரை தமிழர்களின் கூர்வாள் என்பதை, அவ்வப்போது எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் நினைவூட்டி வருகிறார்.
போர் என வந்து விட்டால், வெற்றி ஒன்று தான் நம் இலக்கு. சில தளபதிகளை இழந்தாலும், அரசனோடு நின்று அஞ்சாது, கண்துஞ்சாது, நம் நாட்டு அரசன் செல்லும் பாதையில் பயணிப்பதே நாட்டை பாதுகாக்கும் செயல்.
துரை மாவீரன் மட்டுமல்ல; நாளைய தமிழகத்தின் மகா பேரரசன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது, தி.மு.க., கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது. ஆதரவாகவும், எதிராக பலரும் பேசி வருகின்றனர்.