கூட்டணிக்கு வேட்டு வைக்கும் கார்த்தி: நடவடிக்கை எடுக்க போர்க்கொடி
கூட்டணிக்கு வேட்டு வைக்கும் கார்த்தி: நடவடிக்கை எடுக்க போர்க்கொடி
கூட்டணிக்கு வேட்டு வைக்கும் கார்த்தி: நடவடிக்கை எடுக்க போர்க்கொடி
ADDED : ஜூலை 29, 2024 12:43 AM

'தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்று பேசிய, கார்த்தி சிதம்பரம் எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான இளங்கோவன், அழகிரி ஆதரவாளர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
புதுக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், கார்த்தி சிதம்பரம் பேசுகையில், 'கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, எந்த பிரச்னையையும், நாம் சுட்டிக்காட்டாமல் இருக்கக் கூடாது. அரசு செய்யும் தவறுகளை, மக்கள் பிரச்னைகளை, நாம் கட்டாயம் பேச வேண்டும்' என்றார்.
அவருக்கு பதிலடி தரும் வகையில், முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறுகையில், 'தி.மு.க., கூட்டணி இல்லை என்றால் காங்கிரசுக்கு, 'டிபாசிட்' கிடைத்திருக்காது.
'கார்த்தி சிதம்பரம் எம்.பி.,யாகி விட்டார். உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் வெற்றி பெற வேண்டாமா; இதை மனதில் வைத்து அவர் பேச வேண்டும். கார்த்தியின் பேச்சு, தமிழக காங்கிரசுக்கு துரோகம் செய்யும் வகையில் உள்ளது' என்றார்.
இந்நிலையில், தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரியின் ஆதரவாளரும், துணை தலைவருமான பொன்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
லோக்சபா தேர்தலில், ஒன்பது தொகுதிகளை தி.மு.க., வழங்கிய போது, கூடுதலாக தாருங்கள் என, கார்த்தி சிதம்பரம் ஏன் வலியுறுத்தவில்லை.
திருநெல்வேலி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலையில், குற்றவாளிகளை ஏன் கண்டுபிடிக்கவில்லை என, முதல்வரை சந்தித்து கேட்டிருக்கலாமே.
ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும்போது எதிர்க்கட்சி தலைவர் அண்ணாமலை கேட்க வேண்டிய கேள்விகளை, கார்த்தி கேட்பதில் தனிப்பட்ட லாபம் என்ன?
காமராஜர் ஆட்சி அமைப்போம் என ஒரு வார்த்தை பேசிவிட்டு, கூட்டணி கட்சியை விமர்சித்து விட்டு, மேடையை விட்டு இறங்கி விட்டால், காமராஜர் ஆட்சி அமைந்து விடுமா? அல்லது காங்கிரஸ் தான் வளர்ந்து விடுமா? தி.மு.க., கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் பேசி வரும் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இளங்கோவனின் ஆதரவாளரான மயிலை அசோக்குமார் கூறுகையில், “நாம் தனித்து நிற்கிறோமா, கூட்டணியில் நிற்கிறோமா என்பதை விட, நம் வலிமை என்ன என்பதை உணர வேண்டும். இளங்கோவனை இழிவாக பேசுவதை, கார்த்தி நிறுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்
- நமது நிருபர் -.