புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிப்பதில் தோற்ற வனத்துறை
புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிப்பதில் தோற்ற வனத்துறை
புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிப்பதில் தோற்ற வனத்துறை
UPDATED : ஜூலை 29, 2024 03:24 AM
ADDED : ஜூலை 28, 2024 11:54 PM

சென்னை: வால்பாறையில் பிடிபட்ட புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிப்பதில், வனத்துறை தோல்வி அடைந்துள்ளதாக, வன உயிரின ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக வனப்பகுதிகளில் தனியே தவிக்கும் விலங்குகளின் குட்டிகளை மீட்டு, அதன் தாயுடன் சேர்த்து வைக்க வனத்துறையினர் முயற்சி செய்வர்.
அப்படி சில சமயங்களில், குட்டி யானைகள் தாயுடன் சேர்வதை பார்க்க முடிந்தது. மிக சிறிய அளவிலான புலி குட்டிகளும், அதன் தாயுடன் சேர்ந்த வரலாறும் உண்டு.
மறுவாழ்வு மையம்
குட்டிகளுக்கும், தாய் விலங்குகளுக்கும் இடையிலான சூழலை பொறுத்தே, இந்த முயற்சிகள் வெற்றி பெறும். இதில், வெற்றி கிடைக்காத நிலையில், சம்பந்தப்பட்ட குட்டிகளை, வண்டலுாரில் உள்ள உயிரியல் பூங்கா அல்லது மறுவாழ்வு மையத்துக்கு அனுப்புவது வழக்கம்.
ஆனால், இதற்கு மாறான சில நடவடிக்கைகளில், வனத்துறையினர் சமீபத்தில் ஈடுபட்டது சர்ச்சையானது. 2021 செப்டம்பரில், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் தலைமுடி எஸ்டேட் பகுதியில், தாயை பிரிந்த நிலையில், 1 வயது புலிக்குட்டி வனத்துறையால் மீட்கப்பட்டது.
அந்த புலிக்குட்டிக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, மானாம்பள்ளி அருகில் வைத்து வனத்துறையினர் பராமரித்தனர். ஒரு கட்டத்துக்கு பின், அதை வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு அனுப்ப, அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தனர்.
உயரதிகாரிகள் சிலர், சோதனை முயற்சியாக, புலிக்குட்டியை அங்கேயே தனியாக தங்க வைத்து, வேட்டையாடும் பயிற்சி அளிக்க திட்டமிட்டனர்.
இதற்காக, 75 லட்சம் ரூபாய் செலவில், மந்திரி மட்டம் என்ற பகுதியில், 10,000 சதுரடி பரப்பளவுக்கு திறந்தவெளி கூண்டு அமைத்தனர்.
தேவையான பரப்பளவு
இங்கு தினமும் ஆடு, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளை விட்டு, புலிக்குட்டி அவற்றை வேட்டையாடும் என்று எதிர்பார்த்தனர்.
மேலும், புலிக்குட்டி தானே வேட்டையாடி உணவை தேடிக்கொள்ளும் நிலையில் தான், அதை காட்டுக்குள் விட வேண்டும்.
வேட்டையாட பயிற்சி இல்லாத நிலையில், அதை காட்டுக்குள் விட்டால், அது பிற புலிகளால் தாக்கப்பட்டு இறந்து விடும் என்றும், வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
புலிக்குட்டி வேட்டையாடும் பயிற்சி அளிக்க, 2022ல் துவங்கிய முயற்சி, 2024 ஜூன் வரை நீடித்தது.
ஆனால், இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அந்த புலிக்குட்டியை வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது:
பொதுவாக புலி, சிறுத்தை போன்ற விலங்குகள், அதன் தாய் உள்ளிட்ட மூத்த விலங்கு களை பார்த்தே வேட்டையாட பழகும். அதற்கு மாறாக, தனியாக கூண்டில் அடைத்து வைக்கும் நிலையில், அது எப்படி வேட்டையாட பழகும்.
ஓரளவுக்கு வளர்ந்த நிலையில் இருந்தால், புலிக்குட்டியை வனத்துக்குள் விட்டிருக்கலாம்; மிகச்சிறிய குட்டி என்பதால், இதை அப்போதே வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.
மேலும், தேசிய புலிகள் ஆணையம் வகுத்துள்ள வரையறைகளுக்கு மாறாக, குறைந்த பரப்பளவில் தான், மந்திரி மட்டம் திறந்தவெளி கூண்டு அமைக்கப்பட்டு இருந்தது. இது, ஒரு புலி ஆரோக்கியமாக வாழ தேவையான பரப்பளவில் பாதிக்கும் குறைவாகும்.
இது போன்ற காரணங்களால், வால்பாறை புலிக்குட்டியை வேட்டையாட வைப்பதில், வனத்துறை முழுமையான தோல்வி அடைந்து உள்ளது.
அறிவியல்பூர்வ வழிமுறைகளை பின்பற்றாமல், இதில் முக்கிய முடிவுகள் எடுத்து, அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய வனத்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.