'டிரில்லியன் டாலர்' பொருளாதாரம் எளிதாகும்: திருப்பூர் தொழில் துறை வரவேற்பு
'டிரில்லியன் டாலர்' பொருளாதாரம் எளிதாகும்: திருப்பூர் தொழில் துறை வரவேற்பு
'டிரில்லியன் டாலர்' பொருளாதாரம் எளிதாகும்: திருப்பூர் தொழில் துறை வரவேற்பு

'டிரில்லியன் டாலர்' பொருளாதாரம்
சக்திவேல், துணை தலைவர், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்: தமிழக பட்ஜெட், எதிர்கால உள்கட்டமைப்பு வளர்ச்சியை கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த, 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை கருத்தில்கொண்டு, அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. இளைஞர் வேலைவாய்ப்பு, மகளிர் தொழில்முனைவோர் உருவாக்கத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். ஒரு லட்சம் பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் மானிய திட்டம், வெற்றியடையும்.
துாத்துக்குடியில் தொழில்நுட்ப பூங்கா
சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்: துாத்துக்குடியில், செயற்கை நுாலிழை உற்பத்திக்கான தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தொழிலாளர் நலன்கருதி, 1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு, 'குழு காப்பீடு' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூருக்கு சற்று ஏமாற்றம்!
ஈஸ்வரன், தலைவர், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா), திருப்பூர்: தமிழக பட்ஜெட்டில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு, 1,918 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்துறைக்கு, 3,915 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு, 1,975 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்திருந்த மின் கட்டண குறைப்பு, சலுகை மானியம் போன்ற அறிவிப்புகள் இடம்பெறவில்லை. நவீன நிரந்தர கண்காட்சி மையம் குறித்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்காக அறிவிப்புகள் இருந்தாலும், எதிர்பார்ப்புகளுடன் இருந்த திருப்பூருக்கு அறிவிப்புகள் இல்லாதது சற்று ஏமாற்றமாக இருக்கிறது.
பெண் தொழிலாளர் தங்குமிட வசதி
இளங்கோவன், தலைவர், அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு (அபாட்): பெண் தொழிலாளர்களுக்கான தங்குமிட வசதி ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். திருப்பூர் போன்ற வெளிமாநில தொழிலாளர் வசிக்கும் பகுதிக்கு, சிறப்பு சலுகை வழங்க வேண்டும். நிறுவனங்களின், 50 சதவீத பங்களிப்புடன் மகளிர் விடுதி அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். திருப்பூருக்கு தனி அறிவிப்பு இல்லாவிட்டாலும், குறு, சிறு தொழில்களுக்கான திட்டங்களால், பின்னலாடை தொழில்துறையினரும் பயனடைவர்.