தர்மபுரியில் சவுமியா தோல்விக்கு காரணம் திருமாவளவன்? பா.ம.க.,வினர் குமுறல்
தர்மபுரியில் சவுமியா தோல்விக்கு காரணம் திருமாவளவன்? பா.ம.க.,வினர் குமுறல்
தர்மபுரியில் சவுமியா தோல்விக்கு காரணம் திருமாவளவன்? பா.ம.க.,வினர் குமுறல்
UPDATED : ஜூன் 11, 2024 12:32 PM
ADDED : ஜூன் 11, 2024 05:26 AM

சென்னை: சிதம்பரம் தொகுதியில் வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு கடும் போட்டியை தர பா.ம.க., தவறியதால், அக்கட்சியினர் தர்மபுரியில் எளிதாக பா.ம.க.,வை வீழ்த்தி விட்டதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா, 21,300 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதற்கு முக்கிய காரணம் அரூர் தனி சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் மணி 85,850 ஓட்டுகளைப் பெற்றார். ஆனால், பா.ம.க.,வுக்கு 46,175 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. இதுவே பா.ம.க.,வின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இதை சுட்டிக்காட்டியுள்ள வி.சி., தலைவர் திருமாவளவன், 'அரூர் தனி சட்டசபை தொகுதியில் வி.சி.,யின் ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு விழுந்ததால்தான் தர்மபுரியில் பா.ம.க., தோல்வி அடைந்தது' எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, பா.ம.க., நிர்வாகிகள் கூறியதாவது:
தர்மபுரியில், சவுமியா அன்புமணியை வெற்றி பெறச்செய்ய ் கடுமையாக களப்பணி ஆற்றினோம். அதன் பலனாக பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளில் முதலிடத்தைப் பிடித்தோம்.
பாலக்கோடு, மேட்டூரில் தி.மு.க., முந்தினாலும் ஓட்டு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தது. ஆனால், அரூர் தனி தொகுதியில் தி.மு.க., பெற்றதில் கிட்டத்தட்ட பாதி அளவுக்குத்தான் பா.ம.க.,வுக்கு கிடைதத்து. வி.சி.,கட்சியினரின் களப்பணியே இதற்கு காரணம்.
திருமாவளவனுடன் நேரடியான மோதல் வேண்டாம் என்பதால்தான், கடந்த 1989 முதல் தொடர்ந்து போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில், கடந்த இரு தேர்தல்களாக பா.ம.க., போட்டியிடவில்லை.
சிதம்பரம் தொகுதியில் செல்வாக்குள்ள பா.ம.க., நேரடியாக இம்முறை களம் இறங்கி கடும் நெருக்கடியை திருமாவளவனுக்குக் கொடுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், தங்கள் தலைவரை கடும் போட்டியில் இருந்து எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, சிதம்பரத்திலேயே இருந்து முழு கவனத்தையும் செலுத்தி இருப்பர். அப்படி செய்யாததால், சிதம்பரம் தொகுதி வி.சி.கட்சியினர் தர்மபுரி தொகுதியில், குறிப்பாக அரூர் சட்டசபை தொகுதியில் கடுமையாக பணியாற்றி சவுமியாவை வீழ்த்தியுள்ளனர். அவர் வெற்றி பெற்றிருந்தால், மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கும்.
இனியாவது, கட்சி தலைமை தேர்தலுக்கு வியூகம் அமைத்து செயல்படுவதற்கு முன் நிறைய யோசித்து செயல்பட வேண்டும் என்றனர்.