ஒண்டிப்புதுாரில் ஸ்டேடியம்; சுங்கம் சந்திப்பில் பாலம்! 2 ஆண்டுகளுக்கு பின் விரிவான திட்ட அறிக்கை
ஒண்டிப்புதுாரில் ஸ்டேடியம்; சுங்கம் சந்திப்பில் பாலம்! 2 ஆண்டுகளுக்கு பின் விரிவான திட்ட அறிக்கை
ஒண்டிப்புதுாரில் ஸ்டேடியம்; சுங்கம் சந்திப்பில் பாலம்! 2 ஆண்டுகளுக்கு பின் விரிவான திட்ட அறிக்கை
UPDATED : ஜூன் 26, 2024 04:36 AM
ADDED : ஜூன் 25, 2024 11:23 PM

கோவை ஒண்டிப்புதுார் பகுதியில், சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பது உறுதியாகியுள்ள நிலையில், சுங்கம் பகுதியில் பாலம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகியுள்ளது.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவுள்ள கோவையில், விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும் அதிகமாக இருப்பதால், இங்கும் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கேற்ப, கோவை தொகுதியில் வெற்றியும் பெற்றதால், சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு இடம் பார்ப்பதற்காக, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, கடந்த வாரத்தில் கோவைக்கு வந்தார்.
மூன்று இடங்கள் பரிந்துரை
கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க, கோவையில் மூன்று இடங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ஒண்டிப்புதுாரில் உள்ள திறந்தவெளி சிறையுள்ள இடத்தில், அவர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆனால், அந்த இடம் இறுதி செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ஒண்டிப்புதுாரில் திறந்தவெளி சிறை அமைந்துள்ள இடத்தில், 20 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த இடத்தில், அமைச்சர் ஆய்வு செய்தபோதே, சமூக ஊடகங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்தன.
சிங்காநல்லுாரிலிருந்து ஒண்டிப்புதுார் பாலம் வரையிலான ரோடு, குறுகலாகவுள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அங்கிருந்து திறந்தவெளிச்சிறை அமைந்துள்ள பகுதிக்குச் செல்லவும், சரியான வழித்தடங்கள் இல்லை. இதனால், அங்கு ஸ்டேடியம் அமைக்கப்பட்டால், இப்போதுள்ள போக்குவரத்து நெரிசல் இரட்டிப்பாகுமென்ற அச்சம், மக்களிடம் எழுந்துள்ளது.
ஆண்டுக்கணக்கில் இழுபறி
ஏனெனில், ஸ்டேடியத்துக்கு 'எல் அண்ட் டி' பை பாஸ் வழியாகவே, பாதை அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், ஏற்கனவே அந்த சந்திப்பில் மிகக்கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த சந்திப்பில் பாலம் கட்டாமல், ஸ்டேடியம் கட்டினால், திருச்சி ரோட்டில் நகருக்குள் யாரும் நுழையவும் முடியாது; வெளியேறவும் முடியாது.
ஆனால் அந்த சந்திப்பில் பாலம் கட்டும் திட்டம், ஆண்டுக்கணக்கில் இழுபறியாகி வருகிறது. தமிழகத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு, தமிழக அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறை பரிந்துரை அனுப்பும். அதை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து, குறிப்பிட்ட பணிகளுக்கு ஒப்புதல் தரும்.
கடந்த 2021-2022 நிதியாண்டில், 28 பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கன்சல்டன்ஸி நியமிக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதில், கோவை, திருச்சி ரோட்டில் 'எல் அண்ட் டி' பை-பாஸ் கடக்கும் சுங்கம் சந்திப்பிலிருந்து, பாப்பம்பட்டி பிரிவு வரையிலுமாக 2.6 கி.மீ., நீளத்துக்கு (கி.மீ., 331.2-333.8 என்.எச்.,67) புதிதாக பாலம் கட்டவும், திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதலும், நிதியும் வழங்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும், இதுவரை இந்த பாலம் கட்டும் பணி, அடுத்த கட்டத்துக்கு நகரவேயில்லை.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சுங்கம் சந்திப்பில் பாலம் கட்டுவதற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாராகி, இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளது. மத்திய அரசின் ஒப்புதலும், நிதியும் கிடைத்ததும் டெண்டர் விடப்பட்டு, பாலம் கட்டும் பணி துவங்கும்' என்றார்.
கிரிக்கெட் ஸ்டேடியம் வந்தாலும், வராவிட்டாலும் சுங்கம் சந்திப்பில், விரைவாக பாலம் கட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்!
-நமது நிருபர்-