பலிகடா ஆக்கப்படும் போலீசார்; வருவாய்த் துறையினர் மீதும் நடவடிக்கை பாயுமா?
பலிகடா ஆக்கப்படும் போலீசார்; வருவாய்த் துறையினர் மீதும் நடவடிக்கை பாயுமா?
பலிகடா ஆக்கப்படும் போலீசார்; வருவாய்த் துறையினர் மீதும் நடவடிக்கை பாயுமா?
ADDED : ஜூன் 26, 2024 02:19 AM

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு போலீசார் மீது மட்டுமல்லாமல், வருவாய்த்துறையினர் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டு மே மாதம் கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் உயிரிழந்தனர். தற்போது, கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 59 பேர் பலியாகி உள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களின்போது, போலீஸ் துறையினர் மீது மட்டுமே சஸ்பெண்ட், இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆனால், போலீசாருக்கு இணையாக பணியாற்றும் வருவாய்த்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது கிடையாது.
கிராமங்கள் மட்டத்தில் பணியாற்றும் வி.ஏ.ஓ.,க்கள் மூலமாக கள்ளச்சாராய விற்பனை, மணல் கடத்தல், சட்டம் - ஒழுங்கு பிரச்னை போன்ற அனைத்து தகவல்களும் தாசில்தாருக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது. தாசில்தார் மூலமாக மாவட்ட நிர்வாகத்தில் உள்ள உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கிராமங்களை பொருத்தவரை, சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,வுக்கு தெரியாமல் எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. கருணாபுரம் சம்பவத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து வருவாய்த் துறையினருக்கு தெரியாமல் நடந்து இருக்காது.
எனவே, போலீசார் மீது மட்டுமல்லாமல், வருவாய்த்துறையினர் மீதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வருங்காலத்தில் கருணாபுரம் போன்ற துயர சம்பவங்களை தடுக்க முடியும்.
பாதுகாப்பு தேவை
கள்ளச்சாராய விற்பனை குறித்து பல்வேறு தகவல்கள் தெரிந்தும், கள்ளச்சாராய வியாபாரிகளின் அரசியல் பின்புலத்தை பார்த்து வருவாய்த் துறையினர் மவுனமாக உள்ளனர். மேலும், மணல் கடத்தல் மாபியாவை சேர்ந்தவர்கள், வி.ஏ.ஓ., தாசில்தார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவங்கள், அரசு பணியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல் தெரிவிக்கும் வி.ஏ.ஓ.,வில் ஆரம்பித்து வருவாய்த் துறையினர் அனைவருக்கும் அரசு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான், அவர்கள் தங்கள் கடமையை பயமின்றி செய்வார்கள்.
- நமது நிருபர் -