மோசடி அதிகாரிகள் மீது பதிவுத்துறை அதிரடி
மோசடி அதிகாரிகள் மீது பதிவுத்துறை அதிரடி
மோசடி அதிகாரிகள் மீது பதிவுத்துறை அதிரடி
UPDATED : ஜூன் 10, 2024 04:03 AM
ADDED : ஜூன் 10, 2024 12:41 AM

சென்னை: பத்திரப்பதிவில் மோசடி செய்யும் சார் -பதிவாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் மீது, 'சஸ்பெண்ட்' உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை, பதிவுத்துறை மீண்டும் துவக்கியுள்ளது.
பெரும்பாலான இடங்களில், சார் - பதிவாளர்களுக்கு ராசியான ஆவண எழுத்தர்கள் வாயிலாகவே, பதிவு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்படுகின்றன. இதில், வெளியில் உள்ள தரகர்கள் வாயிலாக, பெரும் தொகை கைமாறுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பதிவுத்துறை அமைச்சர், செயலர், ஐ.ஜி., உள்ளிட்ட அதிகாரிகள், பல்வேறு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் சிக்கிய, 100க்கும் மேற்பட்ட சார் - பதிவாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது, இடமாற்றம், சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கடந்த ஓராண்டாக, இந்த அதிரடி நடவடிக்கை சற்று ஓய்ந்து இருந்தது. தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பின், மீண்டும் அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
லஞ்சம் மற்றும் முறைகேடு புகாரில் சிக்கிய அதிகாரிகள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை வடக்கு பதிவு மாவட்டத்தில், உதவியாளராக இருந்த என்.ஜெயசுதாவை தற்காலிக பணிநீக்கம் செய்து, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அறிக்கை அடிப்படையில், மோசடி அதிகாரிகள் குறித்த கோப்புகள் தயாரிக்கப்பட்டு, தலைமையகத்தில் ஆய்வு செய்யப்படுகின்றன.
இதில் இடம்பெற்றுள்ள சார் - பதிவாளர்கள், உதவியாளர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கைகள் பாய உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.