Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ 2,300 டன் பிளாஸ்டிக் கழிவு தடுப்பு: வனத்துறை அதிகாரிகள் தகவல்

2,300 டன் பிளாஸ்டிக் கழிவு தடுப்பு: வனத்துறை அதிகாரிகள் தகவல்

2,300 டன் பிளாஸ்டிக் கழிவு தடுப்பு: வனத்துறை அதிகாரிகள் தகவல்

2,300 டன் பிளாஸ்டிக் கழிவு தடுப்பு: வனத்துறை அதிகாரிகள் தகவல்

UPDATED : ஜூன் 10, 2024 04:27 AMADDED : ஜூன் 10, 2024 12:32 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: 'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு இயக்கம் வாயிலாக, தமிழகத்தில், 2,300 டன் அளவுக்கு, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கழிவுகள் தடுக்கப்பட்டுள்ளன' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், 2019 ஜனவரி, 1 முதல், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டன. இந்நிலையில், 2021 டிச., 23ல் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில், 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கம் துவங்கப்பட்டது.

குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், மஞ்சப்பை வழங்குவதற்காக தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்பட்டன. இதில், பொதுமக்கள், 10 ரூபாய் செலுத்தி, மஞ்சப்பை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்டுள்ள தகவல்:

மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தால், 2,300 டன் அளவுக்கு, ஒருமுறை பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பது தடுக்கப்பட்டு உள்ளது. இது, இந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இதற்காக, பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட, 1.8 லட்சம் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும், 170 இடங்களில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும், 230 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் வாயிலாக, பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில், 2019 - 20 நிலவரப்படி, ஆண்டுக்கு, 4.19 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின. 2020 - 21ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அடிப்படையில், நாளொன்றுக்கு, 1,178 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாவதாக கணக்கிடப்பட்டது.

இந்த அடிப்படையில், மஞ்சப்பை இயக்கம் வாயிலாக, மக்கள் துணிப்பையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் அடிப்படையில் கணக்கிட்டால், தற்போது வரை, 2,300 டன் கழிவுகள் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us