விஜய் கட்சிக்கு 2026 தான் இலக்கு: கூறுகிறாார் புஸ்ஸிஆனந்த்
விஜய் கட்சிக்கு 2026 தான் இலக்கு: கூறுகிறாார் புஸ்ஸிஆனந்த்
விஜய் கட்சிக்கு 2026 தான் இலக்கு: கூறுகிறாார் புஸ்ஸிஆனந்த்
UPDATED : ஜூன் 10, 2024 04:17 AM
ADDED : ஜூன் 10, 2024 12:44 AM

புதுக்கோட்டை: ''தமிழக வெற்றிக் கழகத்திற்கு, 2026 தான் இலக்கு. கண்டிப்பாக 2026ல் வெற்றி பெறும்,'' என, புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலர் புஸ்ஸிஆனந்த் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழகத்திலேயே முதன்முதலாக மாவட்ட அலுவலகம் புதுக்கோட்டையில் தான் திறக்கப்படுகிறது. இந்த அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸிஆனந்த் திறந்தார்.
பின், தொண்டர்களிடம் அவர் பேசியதாவது:
நடிகர் விஜயின் கட்டளையை நிறைவேற்ற தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். முதலில் தொழில் நடத்தி சம்பாதிக்க வேண்டும். அதன்பின் குடும்பத்தை கவனிக்க வேண்டும்.
அதற்கு அடுத்தபடியாக சம்பாதித்த காசில் 1 சதவீதமோ, 2 சதவீதமோ பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் நடிகர் விஜயின் கட்டளை. அதை ஒவ்வொரு தொண்டனும் நிறைவேற்ற வேண்டும்.
நடிகர் விஜய் கூறியபடி, 2026 தான் நமது இலக்கு. 2026ல் கண்டிப்பாக தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும். அதற்கு ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும். நாம் யாரையும் விமர்சனம் செய்து பேச வேண்டாம். நம் மக்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். பொதுமக்கள் பிரச்சனையில் முன்னுரிமை கொடுத்து அவருடைய பிரச்சனையை தீர்ப்பதற்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நடிகர் விஜய் கூறியபடி நாங்கள் மக்கள் பணி செய்கிறோம். நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி சேருவது பற்றி, எங்களுடைய தலைவர் நடிகர் விஜய் தான் அறிவிப்பார்.
மாநில கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷன் எழுப்பிய கேள்விக்கு நாங்கள் பதில் கொடுத்துள்ளோம். அதன்படி தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும்.
தமிழக வெற்றிக் கழகம் மக்களோடு இணைந்து மக்கள் பணியாற்றி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கூட்டம் வரும் 18ம் தேதி நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அது தவறு. அப்படி ஒரு கூட்டம் நடப்பதாகவே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.