நில அளவை பணிகளுக்கு வருகிறது கண்காணிப்பு மையம்
நில அளவை பணிகளுக்கு வருகிறது கண்காணிப்பு மையம்
நில அளவை பணிகளுக்கு வருகிறது கண்காணிப்பு மையம்
ADDED : ஜூலை 25, 2024 01:35 AM

சென்னை,: தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், பட்டா பெற விண்ணப்பிக்கின்றனர். இதை எளிமைப்படுத்தவும், பொது மக்களுக்கு அலைக்கழிப்பை குறைக்கும் வகையிலும், பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
அதைத் தொடர்ந்து, பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல் தொடர்பான நில அளவை சேவையில், தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பட்டா மாறுதல், உட்பிரிவு உருவாக்குவதில் நிலத்தின் எல்லைகள், பரப்பளவு போன்ற விபரங்களில், பிழைகள் ஏராளம் வருகின்றன. இதுபோன்ற பிழைகளை சரி செய்ய விண்ணப்பித்தால், அதன் மீது, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
இது குறித்து, நில அளவை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நில அளவை பணியில் தரக்கட்டுப்பாடு வழிமுறைகளை அமல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.
சர்வே எண், அதன் உட்பிரிவு எண்ணுக்கு உட்பட்ட நிலத்தின் அளவை, துல்லியமாக குறிப்பிட வேண்டும். இத்துடன், நில அளவை வரைபட விற்பனை உள்ளிட்ட சேவைகளையும், இத்துறை மக்களுக்கு வழங்கி வருகிறது.
இதில் தரத்தை உறுதி செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்காக, மாநில அளவில் தரக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் ஏற்படுத்தப்படும்.
சென்னையில், நில அளவை துறை வளாகத்தில், மையம் அமைக்கப்படும். குறிப்பாக, நில அளவை துறையின் சேவைகள் குறித்த புள்ளி விபரங்களை, இணைய வழியில், உடனுக்குடன் உயரதிகாரிகள் கண்காணிக்க வசதி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.