ஆகஸ்ட் மாத நீரின் அளவை இறுதி செய்ய 30ல் கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு
ஆகஸ்ட் மாத நீரின் அளவை இறுதி செய்ய 30ல் கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு
ஆகஸ்ட் மாத நீரின் அளவை இறுதி செய்ய 30ல் கூடுகிறது காவிரி ஒழுங்காற்று குழு
ADDED : ஜூலை 25, 2024 03:35 AM

வரும் ஆகஸ்ட் மாதத்திற்குரிய காவிரி நீரை தடங்கலின்றி திறந்துவிட வேண்டுமென, காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இது குறித்து ஆலோசிக்க, வரும் 30ம் தேதி ஒழுங்காற்றுக் குழு கூடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 32வது ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பின், தமிழக நீர்வளத்துறை கூடுதல் செயலர் மணிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
இதுவரை வந்து சேர்ந்துள்ள நீரின் அளவு குறித்த விபரங்களை இந்த கூட்டத்தில் சமர்ப்பித்தோம். அது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவில், மாதந்தோறும் தமிழகத்துக்கு தர வேண்டிய நீரின் அளவு குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்துக்கு வர வேண்டிய காவிரி நீரின் அளவு முழுமையாக வந்து சேர்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டுமென வலியுறுத்தினோம்.
இறுதி தீர்ப்பில் கூறியுள்ளபடி, ஆகஸ்ட் மாதத்திற்குரிய தண்ணீரை வழங்க வேண்டுமென கேட்டுள்ளோம். இதற்காக வரும் 30ம் தேதி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மழை நன்றாக பெய்து வருவதால், தண்ணீர் வரத்து உள்ளது. இந்த மாதம் தண்ணீர் பிரச்னை இல்லை. கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து, 30,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினியில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
வருங்காலங்களில் தமிழகத்துக்கு உண்டான பங்கீட்டு தண்ணீரை திறந்துவிட வேண்டுமென்பது தான் நம் கோரிக்கை. வரும் ஆகஸ்டில் 45 டி.எம்.சி., தண்ணீரை எக்காரணம் கொண்டும் குறைவில்லாமல் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளோம். இந்த கூட்டத்தில், மேகதாது அணை குறித்து எதுவும் பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -