Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ மழைநீர் வழிப்பாதையில் 30 இடங்களில் அடைப்பு; வெள்ள அபாயத்தில் ஓ.எம்.ஆர்.,

மழைநீர் வழிப்பாதையில் 30 இடங்களில் அடைப்பு; வெள்ள அபாயத்தில் ஓ.எம்.ஆர்.,

மழைநீர் வழிப்பாதையில் 30 இடங்களில் அடைப்பு; வெள்ள அபாயத்தில் ஓ.எம்.ஆர்.,

மழைநீர் வழிப்பாதையில் 30 இடங்களில் அடைப்பு; வெள்ள அபாயத்தில் ஓ.எம்.ஆர்.,

UPDATED : ஜூலை 25, 2024 05:56 AMADDED : ஜூலை 25, 2024 12:21 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

'

சென்னை, பழைய மாமல்லபுரம் சாலையில் மழைநீர் வடிவதற்காக அமைக்கப்பட்ட நீர்வழிப்பாதையில் 30 இடங்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் பணியால், வடிகால் அடைப்பை நீக்குவதில் சிரமம் இருப்பதால், வரும் பருவமழைக்கு ஓ.எம்.ஆரில் வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது.

சென்னையின் பிரதான போக்குவரத்து வழித்தடத்தில் ஒன்றாக ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை உள்ளது.

இதில் மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை, 20 கி.மீ., துாரத்திற்கு, 135 அடி அகலத்தில் ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு, 2008ல் திறக்கப்பட்டது.

இத்தடத்தில் ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. அதனால், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து, கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.

Image 1298523


சாலை பராமரிப்பு


இந்நிலையில், ஏழு மேம்பாலங்கள், இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை - ரேடியல் சாலை இணைப்பு, மெட்ரோ ரயில் போன்ற திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளால், ஓ.எம்.ஆரில் சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது.

புறநகர் பகுதியில் உள்ள சேலையூர், பள்ளிக்கரணை, நாராயணபுரம் உட்பட 60க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், ஒக்கியம் மடு வழியாக, பகிங்ஹாம் கால்வாயில் கலந்து, முட்டுக்காடு அருகே கடலில் சேர்கிறது.

இந்த மழைநீரால் ஓ.எம்.ஆரில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இச்சாலை விரிவாக்கத்தின்போதே, அணுகு சாலையில் 3 அடி அகலம், 3 அடி ஆழத்தில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டது.

அதேபோல், 110 அடி அகல இச்சாலையின் குறுக்கே, 8 அடி அகலம், 4 அடி ஆழத்தில், 30 இடங்களில் நீர்வழிப்பாதையும் அமைக்கப்பட்டது. மத்திய கைலாஷ் - சிறுசேரி வரையில் தரமணி, எஸ்.ஆர்.பி., டூல்ஸ் உட்பட 30 இடங்களில் இப்பாதை அமைக்கப்பட்டது.

இந்த நீர்வழிப்பாதையில் வடியும் மழைநீர், பகிங்ஹாம் கால்வாய் வழியாக முட்டுக்காடு கடலிலும், மற்றொரு வழியாக சதுப்பு நிலத்தில் சேரும் வகையிலும், பக்கவாட்டில் வடிகால்கள் கட்டப்பட்டன. ஆனால், 110 அடி அகல நீர்வழிப்பாதையில் துார்வாருவதற்காக நுழைவாயிலை அமைக்கவில்லை.

இதனால், பெரும்பாலான நீர்வழிப்பாதைகளில் அடைப்பு ஏற்பட்டு, முழு கொள்ளளவில் மழைநீர் வெளியேறவில்லை. சில பாதைகள் சீராக இல்லாததால், அதில் மழைநீர் செல்லவில்லை.

ஒவ்வொரு மழையின்போதும் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு, ஓ.எம்.ஆரில் தார் சாலை மற்றும் அணுகு சாலையில் தேங்கி, வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மோட்டார் கொண்டு நீரை இறைத்து, தண்ணீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இருந்த இந்த சாலை, மெட்ரோ ரயில் பணிக்காக, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இந்த தடத்தில் மெட்ரோ ரயில் பாதை, ரவுண்டானா மேம்பாலம் உள்ளிட்ட பணிகள் முடிய, ஐந்து ஆண்டுகளாகும். அதுவரை, சாலை பராமரிப்பை மெட்ரோ நிர்வாகம் தான் செய்ய வேண்டும்.

பருவமழைக்கு முன், மேற்கண்ட நீர்வழிப்பாதையில் அடைப்பு நீக்கி, துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படும்போது, பெரிதும் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்றாக, ஓ.எம்.ஆர்., உள்ளது. இதனால், சாலையின் குறுக்கே, 30 இடங்களில் அமைக்கப்பட்ட நீர்வழிப்பாதைகளை துார்வாரி, புதுப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

மெட்ரோ ரயில், மேம்பாலங்கள் பணி முடிந்தால், ஓ.எம்.ஆர்., போக்குவரத்தில் புதுமை படைத்திருக்கும். ஆனால், வெள்ள பாதிப்பு அபாயத்தால் பின்தங்கிய நிலை உள்ளது.

கேபிள் பதிப்பு


தவிர, இந்த சாலையில், குடிநீர், கழிவுநீர் குழாய்கள், எரிவாயு குழாய், மின் கேபிள்கள் ஆகியவை பதிக்கப்பட உள்ளன. இப்பணிகளாலும், ஓ.எம்.ஆரில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படலாம். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஓ.எம்.ஆர்., பகுதியில் உள்ள நலச்சங்கங்கள் கூறியதாவது:


பெருமழையின் போது, ஐ.டி., தொழில் பாதிக்கப்படுவதுடன், குடியிருப்புகளைச் சுற்றிலும் வெள்ளம் தேங்கி, பல நாட்கள் இயல்பு வாழ்க்கை முடங்கும் சூழல் நிலவுகிறது.

இருக்கிற நீர்வழி கட்டமைப்புகளை மேம்படுத்துவது, புதிய கட்டமைப்புகள் அமைப்பதன் வழியாகத் தான், ஓரளவு நிம்மதியாக இருக்க முடியும்.

அதில் ஒன்றாக, 2008ம் ஆண்டுக்கு முன் ஓ.எம்.ஆரின் குறுக்கே கட்டமைத்த நீர்வழித்தடங்கள் உள்ளன. அவற்றை, தேவைக்கு ஏற்ப அகலம் மற்றும் ஆழப்படுத்தி, அடைப்பு ஏற்படாத வகையில், துார் வாரும் வகையில் நவீன கட்டமைப்புடன் புதுப்பிக்க வேண்டும்.

சாலையின் பக்கவாட்டில் கால்வாயை துார்வார, 40 அடி துாரத்தில் ஒரு இயந்திர நுழைவாயில் அமைக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், கேபிள் பதிப்பதற்காக 4 அடி அகலம், 4 அடி ஆழத்தில் பாதை உள்ளது. கேபிள் பழுதை நீக்க, 60 அடி துாரத்தில் ஒரு இயந்திர நுழைவாயில் உள்ளது.

ஆனால், ஓ.எம்.ஆர்., குறுக்கே சிறிய அளவில் வடிகால் இருப்பதால், 30 இடங்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. மெட்ரோ ரயில் பாதையுடன் மேலும் பல பணிகள் நடப்பதால், இந்த நீர்வழித்தடங்களையும் மேம்படுத்த, மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒப்பந்தத்தில் இல்லை


மெட்ரோ ரயில் திட்டத்துடன், முக்கிய சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணியை செய்கிறோம். இதற்கு, சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் அனுமதி பெற்றுள்ளோம். சாலையின் கீழ் செல்லும் நீர்வழிப்பாதையை புதுப்பிக்க வேண்டும் என்பது, ஒப்பந்தத்தில் இல்லை. ஓ.எம்.ஆர்., வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு, கள ஆய்வு செய்து, நீர்வழிப்பாதையை நவீன முறையில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- மெட்ரோ ரயில் அதிகாரிகள்

பேச்சு நடத்தப்படும்

மெட்ரோ ரயில் பாதை, மேம்பாலங்கள் பணிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஓ.எம்.ஆர்., ஒப்படைக்கப்பட்டுள்ளது. சாலை பழுதை உடனுக்குடன் சரிசெய்யக் கூறி உள்ளோம். மத்திய கைலாஷ் - சிறுசேரி இடையே, ஓ.எம்.ஆர்., குறுக்கே உள்ள நீர்வழிப்பாதை அடைப்பை நீக்க வேண்டும் என, மாநகராட்சியும் வலியுறுத்தி உள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும்.

-- சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us