சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி டில்லி செல்ல நெடுஞ்சாலை துறை முடிவு
சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி டில்லி செல்ல நெடுஞ்சாலை துறை முடிவு
சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி டில்லி செல்ல நெடுஞ்சாலை துறை முடிவு
ADDED : ஜூன் 08, 2024 12:30 AM

சென்னை: தமிழகத்தில், 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில், 5,095 கி.மீ., சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. இவற்றில் கட்டணம் வசூல் செய்ய, 59 இடங்களில், சுங்கச்சாவடிகள் உள்ளன.
மீதமுள்ள 1,511 கி.மீ., சாலைகள், மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு வாயிலாக பராமரிக்கப்படுகின்றன. இச்சாலைகளை பராமரிப்பதற்கான நிதி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக வழங்கப்படுகிறது.
அ.தி.மு.க., ஆட்சியில், மாநில நெடுஞ்சாலைகள் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்காமல், அவற்றை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு, 2,500 கி.மீ., நீளமுள்ள பல்வேறு சாலைகளை எடுத்துக்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதில், திண்டுக்கல் - காரைக்குடி, பெரம்பலுார் - ஆத்துார், சேலம் - திருப்பத்துார், தொப்பூர் - ஈரோடு, மாலுார் - அதியமான்கோட்டை, ஒரகடம்செய்யார் - அரூர், கும்பகோணம் - சீர்காழி உள்ளிட்ட 841 கி.மீ., சாலைகளை தரம் உயர்த்த, மத்திய அரசு அனுமதி வழங்கிஉள்ளது.
திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி, வள்ளியூர் - திருச்செந்துார், கொள்ளேகால் - மேட்டூர், மேட்டுப்பாளையம் - பவானி, அவினாசி - மேட்டுப்பாளையம், பவானி - கரூர், பழனி - தாராபுரம், ஆற்காடு - திண்டிவனம் உள்ளிட்ட, 500 கி.மீ., சாலைகள் மேம்படுத்த கொள்கை ரீதியாக ஒப்புதல் வழங்கப்பட்டது. திண்டுக்கல் - நத்தம், நத்தம் - கொட்டம்பட்டி, சேலம் - திருப்பத்துார் உள்ளிட்ட 21 சாலைகளை 1,497 கி.மீ., தரம் உயர்த்தும் திட்டம் நிலுவையில் வைக்கப்பட்டது.
சுங்க கட்டண வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்ட சாலைகள் மட்டும் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
எஞ்சிய சாலைகளை சீரமைப்பதற்கு தேவையான நிதியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கவில்லை.
இதையடுத்து, டில்லி சென்று, தேசிய நெடுஞ்சாலை ஆணைய உயர் அதிகாரிகளை சந்தித்து, இதுகுறித்து வலியுறுத்த, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு அதிகாரிகள், அடுத்த வாரம் டில்லி செல்ல உள்ளனர்.