எதை தக்க வைக்கப் போகிறார் ராகுல்: வயநாடா, ரேபரேலியா? : பிரியங்காவை களமிறக்கவும் திட்டம்
எதை தக்க வைக்கப் போகிறார் ராகுல்: வயநாடா, ரேபரேலியா? : பிரியங்காவை களமிறக்கவும் திட்டம்
எதை தக்க வைக்கப் போகிறார் ராகுல்: வயநாடா, ரேபரேலியா? : பிரியங்காவை களமிறக்கவும் திட்டம்
ADDED : ஜூன் 08, 2024 12:01 AM

புதுடில்லி: ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டில் எந்த தொகுதியில் தன் பதவியை ராகுல் ராஜினாமா செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த தொகுதியில் தன் சகோதரி பிரியங்காவை நிறுத்த, ராகுல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
புதிய லோக்சபாவுக்கான எம்.பி.,க்களை தேர்வு செய்யும் தேர்தல், நாடு முழுதும் ஏழு கட்டங்களாக நடந்தன. இதன் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியாகின.
இவற்றில், பா.ஜ., 240 தொகுதிகளை வென்ற நிலையில், அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி 235 இடங்களில் வென்றது.
ராஜினாமா
காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல், கேரளாவின் வயநாட்டிலும், உத்தர பிரதேசத்தின் ரேபரேலியிலும் போட்டியிட்ட நிலையில், இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
அரசியலமைப்பின்படி, ஒருவரால் இரண்டு தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் எம்.பி.,யாக இருக்க முடியாது.
எனவே, ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி., பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில், எந்த தொகுதியை ராகுல் விட்டுக் கொடுப்பார் என்ற கேள்வி எழுந்துஉள்ளது. கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தபோது, கேரள மாநிலம் அக்கட்சியை காப்பாற்றியது.
அப்போது, உத்தர பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல், அமேதியில் பா.ஜ.,வின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியை தழுவினார்; வயநாட்டில் வெற்றி பெற்றார்.
இதனால், கடினமான சூழலில் கை கொடுத்த வயநாடு தொகுதியுடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பை ராகுல் கொண்டுள்ளார். எனவே தான், அங்கு இரண்டாவது முறையாக அவர் போட்டியிட்டார் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
விருப்பம்
அதேபோல், உ.பி.,யின் ரேபரேலியில் போட்டியிட அவருக்கு விருப்பம் இல்லாத சூழலில், சோனியா, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கட்டாயத்தின் படியே அங்கு ராகுல் களமிறங்கியதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு மே மாதம் கேரள சட்டசபைக்கு தேர்தல் நடக்கவிருப்பதால், அங்கு லோக்சபா எம்.பி.,யாக ராகுல் இருந்து, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால், அங்கு அவர் தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
அதேபோல், 2027ல் நடக்கவுள்ள உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, அங்கு ராகுலின் பங்கு அவசியம் என காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி விரும்புகிறது.
இப்படியொரு இக்கட்டான சூழலில், வயநாடு தொகுதியின் மீது உணர்வுப்பூர்வமான பிணைப்பு இருந்தாலும், அரசியல் ரீதியாக பார்த்தால் ரேபரேலி தொகுதி எம்.பி., பதவியையே ராகுல் தக்க வைப்பார் என காங்கிரசார் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.
இதற்கிடையே, எந்த தொகுதியில் ராஜினாமா செய்தாலும், அங்கு அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலருமான பிரியங்காவை போட்டியிட வைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.