அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மத்திய பட்ஜெட் உதவுமா? பின்னலாடை துறையினரின் எதிர்பார்ப்பு
அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மத்திய பட்ஜெட் உதவுமா? பின்னலாடை துறையினரின் எதிர்பார்ப்பு
அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மத்திய பட்ஜெட் உதவுமா? பின்னலாடை துறையினரின் எதிர்பார்ப்பு
UPDATED : ஜூன் 18, 2024 06:53 AM
ADDED : ஜூன் 18, 2024 12:20 AM

திருப்பூர்: பின்னலாடை தொழில்துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் திருப்பூர் பின்னலாடைத்துறையினர் காத்திருக்கின்றனர்.
'டாலர் சிட்டி' என்று போற்றப்படும் திருப்பூர் நகரம், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், நாட்டின் அடையாளமாக மாறியுள்ளது. இந்தியாவின் மொத்த பின்னலாடை உற்பத்தியில், 55 சதவீத பங்களிப்புடன், தனிப்பெரும் கேந்திரமாக திகழ்கிறது.
கடந்த, 2022ல் ஏற்பட்ட அபரிதமான பஞ்சு விலை உயர்வால், ஏற்றுமதி ஆர்டர்களை குறித்த நேரத்தில் முடிக்க இயலாமல் தடுமாறினர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார சுணக்கம், போர் சூழல் காரணமாக பின்பற்றப்பட்ட சிக்கன நடவடிக்கையால், மக்களின் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.
கடந்த, 2022 டிச., மாதம் துவங்கி, தொடர்ச்சியாக 13 மாதங்கள், பின்னலாடை ஏற்றுமதி சரிவை சமாளிக்க முடியாமல் தத்தளித்தது. கடும் நலிவு நிலையில் இருந்து மீண்டு வந்துள்ளதால், ஒட்டுமொத்த பின்னலாடை தொழிலுக்கும், ஊக்குவிப்பு அவசியமாகிறது.
குறிப்பாக, பொருளாதார ரீதியான ஒத்துழைப்பும், நிபந்தனையற்ற கடன் திட்டங்களுமே, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தையும், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களையும் உயிர்ப்பிக்கும் என்று நம்புகின்றனர்.
வரும் ஜூலை மாதம், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலாக உள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகளை, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினர் துவக்கியுள்ளனர்.
பட்ஜெட் தயாரிப்புக்கு முன்பு முக்கிய தொழில் அமைப்பு களுடன் கலந்துபேசி, எதிர்கால தேவைகள் குறித்து கேட்டறிவது வழக்கம். அதன்படி, வரும் 20ம் தேதி, பட்ஜெட் ஆலோசனை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கான தற்போதைய தேவைகள் குறித்த பட்டியலை சமர்ப்பிக்க, தொழில்துறையினர் தயாராகி வருகின்றனர்.