Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ தமிழகத்திலும் நெல் கொள்முதல் விலை உயருமா?

தமிழகத்திலும் நெல் கொள்முதல் விலை உயருமா?

தமிழகத்திலும் நெல் கொள்முதல் விலை உயருமா?

தமிழகத்திலும் நெல் கொள்முதல் விலை உயருமா?

ADDED : ஜூன் 17, 2024 02:12 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: 'ஒடிசா அரசை போல தமிழக அரசும், நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு, 3,100 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்' என, விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.

உணவு உற்பத்தியை பெருக்குவதற்காக, நெல், கோதுமை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்பட, 23 வகையான விளைபொருட்களுக்கு, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்கிறது. இது, அதிக விளைச்சல் உள்ள காலங்களில், விலை குறைவால் ஏற்படும் நஷ்டத்தில் இருந்து, விவசாயிகளை பாதுகாக்க உதவுகிறது. மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்த பின், பல மாநில அரசுகள் ஊக்கத்தொகையை அறிவிக்கின்றன.

மத்திய அரசு, 2023 - 24ம் ஆண்டு பருவத்திற்கு, குறைந்தபட்ச ஆதரவு விலையாக, சாதாரண நெல்லுக்கு, 2,183 ரூபாய், சன்ன ரக நெல்லுக்கு, 2,203 ரூபாய் நிர்ணயம் செய்தது. இதைத்தொடர்ந்து, சாதாரண நெல்லுக்கு, 82 ரூபாய், சன்ன ரக நெல்லுக்கு, 107 ரூபாயை ஊக்கத்தொகையாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, 2023 செப்டம்பர் முதல் சாதாரண நெல் குவிண்டால், 2,265 ரூபாய்க்கும், சன்ன ரகம், 2,310 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. புதிய நெல் கொள்முதல் பருவம் வரும் செப்டம்பரில் துவங்கவுள்ளது.

அதனால், நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு, 3,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என, தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2021 சட்டசபை தேர்தல் நேரத்தில், நெல் கொள்முதல் விலை, 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும், கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், ஒடிசாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான, பா.ஜ., அரசு, நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு, 3,100 ரூபாயாக உயர்த்தி, விவசாயிகளை உற்சாகப்படுத்தி உள்ளது. அதாவது, 2,183 ரூபாயில் இருந்து, 43 சதவீதம் அளவிற்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. தேர்தல் வாக்குறுதிபடி, ஆட்சி பொறுப்பேற்றதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஒடிசாவில் ஆண்டுதோறும், 639 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே, கொள்முதல் விலை உயர்வால், அம்மாநில அரசிற்கு ஆண்டுதோறும், 6,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ஒடிசா மாநில அரசை பின்பற்றி, தமிழக அரசும் நெல் கொள்முதல் விலையை, உயர்த்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்த துவங்கி உள்ளனர்.

அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:

தற்போதைய நிலவரப்படி, நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு, 45,000 ரூபாய் உற்பத்தி செலவாகிறது. 2 டன் மகசூல் கிடைத்தாலும், 45,000 ரூபாய் தான் கிடைக்கும். உழுதவன் கணக்கு பார்த்தால், உழக்கு கூட மிஞ்சாது என்ற நிலையே உள்ளது. நெல் கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு, 3,500 ரூபாய் வழங்கும்படி கோரி வருகிறோம்.

விவசாயிகளை சமாதானம் செய்யும் வகையில், ஒடிசா மாநில அரசு, நெல் கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளது. நாட்டிற்கே முன்மாதிரி அரசு, விவசாயிகளின் தோழன் என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும், 45.6 லட்சம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டு, 70.7 லட்சம் டன் உற்பத்தி நடந்து வருகிறது.

சட்டசபையில்

அறிவிப்பு?

''நெல் கொள்முதல் விலையை, அதன் உற்பத்தி செலவை கணக்கிட்டு, குறைந்தது குவிண்டாலுக்கு, 3,100 ரூபாயாவது நிர்ணயிக்க வேண்டும். தி.மு.க., அரசு, 2021ல் பொறுப்பேற்ற போது உற்பத்தி செலவு, குவிண்டாலுக்கு, 1,871 ரூபாயாக இருந்தது. தற்போது, 2,150 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் சாகுபடி செலவு 5 சதவீதம் உயர்ந்து வருகிறது. செலவு அதிகரித்தாலும், லாபம் தரும் வகையில் கொள்முதல் விலை இல்லை.

உற்பத்தி செலவை விட, 50 சதவீதம் கூடுதலாக கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என, மத்திய அரசு நியமித்த எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கை அளித்துள்ளது. வரும் சட்டசபை கூட்டத்திலாவது, கொள்முதல் விலை உயர்வுக்கான அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட வேண்டும். கொள்முதல் விலை உயர்வை விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

- ஆர்.விருத்தகிரி,

தேசிய செயற்குழு உறுப்பினர்,

இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு





      Our Apps Available On




      Dinamalar

      Follow us