ரசாயன மருந்துக்கு பதிலாக உயிரியல் காரணி
ரசாயன மருந்துக்கு பதிலாக உயிரியல் காரணி
ரசாயன மருந்துக்கு பதிலாக உயிரியல் காரணி
UPDATED : ஜூலை 20, 2024 04:34 AM
ADDED : ஜூலை 20, 2024 01:27 AM

விவசாய நிலங்களில் ரசாயன உர பயன்பாட்டை குறைத்து, நஞ்சில்லா விவசாயம் மேற்கொள்ளும் அரசின் திட்டம், திருப்பூர் மாவட்டத்திலும் ஊக்குவிக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் நெல், தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவை விளைவிக்கப்படுகின்றன.
விவசாய நிலங்களில், அளவுக்கதிகமாக ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுவதாக, கண்டறியப்பட்டுள்ள நிலையில், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக, உயிரியல் காரணிகளை பயன்படுத்த, வேளாண் துறை ஊக்குவித்து வருகிறது.
விவசாய நிலங்களில் உயிரியல் காரணிகளை பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி, 'அட்மா' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில், வெள்ளகோவில் வட்டாரம், லட்சுமணநாயக்கன்பட்டி கிராமத்தில், விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இதில், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன், 'அட்மா' திட்ட தொழில்நுட்ப அலுவலர் பூங்கொடி ஆகியோர் பங்கேற்றனர்.
நவீன விவசாயம்
திட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது: நம் நாடு சுதந்திரம் பெற்ற போது, 30 கோடி பேர் இருந்தனர்; அவர்களுக்கான உணவு தேவை போதுமானதாக இல்லாமல் இருந்ததன் விளைவாக, 1960ல், முதல் பசுமை புரட்சி திட்டம் கொண்டு வரப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து புதிய ரக விதை, பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவை தருவிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது; நவீன விவசாயம் ஊக்குவிக்கப்பட்டது.
அதன் பயனாக, விளைச்சல் பெருகியது; உணவு தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இருப்பினும், விவசாயிகள் தொடர்ந்து அதிகளவு செயற்கை, ரசாயன பூச்சிக்கொல்லி உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக, அதன் தாக்கம் விளைப்பொருட்களில் தென்பட்டது; அத்தகைய விளைப்பொருட்களை உண்பதால், நோய் பரவலும் அதிகரித்தது.
எனவே, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துக்கு பதிலாக, மனிதனுக்கும், மண்ணுக்கும் கேடு விளைவிக்காத உயிரியல் காரணிகளை, வேளாண் துறை வாயிலாக அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அசாடிராக்டின், மெட்டாரைசியம் போன்ற உயிரியல் காரணிகளையும், டி.விரிடி, சூடோமோனாஸ் போன்ற உயிரியல் காரணிகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இவை, வேளாண் துறை சார்பில், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது; விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -