தி.மு.க., கூட்டணி பற்றி பேச தமிழக காங்கிரசுக்கு தடை
தி.மு.க., கூட்டணி பற்றி பேச தமிழக காங்கிரசுக்கு தடை
தி.மு.க., கூட்டணி பற்றி பேச தமிழக காங்கிரசுக்கு தடை
ADDED : ஜூன் 15, 2024 12:53 AM

சென்னையில் நடந்த தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில், 'தமிழகத்தில் இன்னும் எத்தனை காலம் தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்' என, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருந்தார். அவர் மறைமுகமாக தி.மு.க., கூட்டணியை விமர்சித்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.
தி.மு.க., மூத்த எம்.பி., ஒருவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை தொடர்பு கொண்டு, 'தமிழகத்தில் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் பேசுகின்றனர். அவர்களின் பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் விவாதமாகி, அதிருப்தி அடைய வைக்கிறது. கூட்டணி விவகாரம் பற்றி பேச பேச வேண்டாம் என, அவர்களிடம் நீங்கள் வலியுறுத்துங்கள்' என கேட்டுக் கொண்டார்.
மேலிட பொறுப்பாளர் அஜோய்குமாரிடமும், தமிழக காங்கிரஸ் பொதுக்குழுவில் நடந்த விவரங்களை டில்லி மேலிடம் கேட்டுள்ளது. கூட்டணி குறித்த பேசியபோது தடுத்து நிறுத்தியிருக்கலாம் அல்லது கண்டித்திருக்கலாம் என, அவரிடம் மேலிடம் கடிந்து கொண்டதாக தெரிகிறது.
இதையடுத்து 'கூட்டணி குறித்து காங்கிரஸ் மத்திய தலைமையே முடிவு செய்யும். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பேசக் கூடாது' என, ராகுல் எச்சரித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: தனித்து போட்டியிடுவது தொடர்பாக, மாநில தலைமையால் முடிவு செய்ய முடியாது; அந்த வரலாறும் இல்லை. எந்த முடிவாக இருந்தாலும், காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்யும். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாருக்கும் கூட்டணி பற்றி பேசுவதற்கு அதிகாரம் இல்லை.
இவ்வாறு கூறினார்.
- நமது நிருபர் -