Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ முதியோர் அனுபவம் இன்றி உலகு அமையாது!

முதியோர் அனுபவம் இன்றி உலகு அமையாது!

முதியோர் அனுபவம் இன்றி உலகு அமையாது!

முதியோர் அனுபவம் இன்றி உலகு அமையாது!

UPDATED : ஜூன் 15, 2024 03:46 AMADDED : ஜூன் 15, 2024 01:27 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெரியவர்களுக்கு தற்போது வீட்டில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. நகர்ப்புறத்தில் சில குடும்பங்களில், முதியவர்கள் அவமதிக்கப்படுகின்றனர். இது, இலைமறை காயாக, பல குடும்பங்களில் நடந்து வருகிறது.

முதியோரின் அதிகமான எதிர்பார்ப்பும், இளைய தலைமுறையினரின் படிப்பறிவும், பணப்புழக்கமுமே, தலைமுறை இடைவெளிக்கு காரணமாகிறது.

இதைத் தவிர, வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள இளைய சமுதாயத்தினரின் வறுமை, மது மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு போன்றவையும், முதியோரை மதிக்காத நிலைக்குக் காரணமாகிறது.

Image 1281511
ஆனால், முதியோரின் வாழ்க்கை அனுபவம், தங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள பேருதவி யாக இருக்கிறது என்பதை, இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ளாதது மிகவும் வேதனையான விஷயம்.

முதியோரை அவமதிப்பது, வயதானவர்களுக்கு ஊறு அல்லது மன இறுக்கத்தை ஏற்படுத்தும் செயல்.

அவமதிப்புகள் பலவிதம்...


 மனம் சார்ந்தது: வெளியில் கூட்டுக் குடும்பம் என்று சொல்லி, வீட்டில் பெரியவர்களிடம் பேசாமல் மனதளவில் காயப்படுத்துதல்

 வாய்மொழி சார்ந்தது: வீட்டில் இருக்கும் முதியோரை அடிக்கடி திட்டுவது அல்லது சண்டை போடுவது

 பொருள் சார்ந்தது: காசோலையில் பொய் கையெழுத்திட்டு பணம் எடுப்பது; உயில் எழுதும்படி வற்புறுத்துதல்

 உடல் சார்ந்தது: மதுபோதையில் முதியோரிடம் பணம் கேட்டு துன்புறுத்துவது மற்றும் அடிப்பது.

முதுமையில் அவதிப்படுவோர் யார்?

எந்த வருமானமோ, சொத்தோ இல்லாமல் இளைஞர்களை சார்ந்திருப்பவர்கள்

 ஒரே குழந்தையைப் பெற்ற முதியோர்

 நாட்பட்ட நோயால் படுத்த படுக்கையில் கிடக்கும் முதியோர், உதாரணம்: மறதி நோய், பக்கவாதம், உதறுவாதம்

 தங்களுடைய அனைத்துத் தேவைகளுக்கும் வீட்டில் இருப்பவர்களின் உதவியை நாடும் முதியோர்

 பெரியவர்களிடமிருந்து பணம் மாதாமாதம் வரும் வரை, அவர்கள் மதிக்கப்படுகின்றனர்; அது நின்றதும், அவரின் நிலை ஒரு ஆறாம் விரலாக ஆகிவிடுகிறது.

மனதளவிலும், உடலளவிலும் மற்றும் பலவகையான அவமதிப்புக்கு ஆளாகும் முதியோர், தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை வெளியே சொல்லத் தயங்குவர். ஏனெனில், இதைப் பற்றி மற்றவர்களிடம் தெரிவித்தால், முதியோர் மேலும் மேலும் அவமதிப்புக்குள்ளாவர்.

ஆகையால், இவர்கள் படும் இன்னலை குடும்ப மருத்துவர், நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களால் மட்டுமே கண்டறிய முடியும்.

முதியோர் யாரால் அவமதிக்கப்படுகின்றனர்?

 முதியோர் வீட்டில் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது, இடவசதி மற்றும் நிதி வசதிக் குறைவால் அவமதிக்கப்படுகிறார்கள்

 முதியோரை தொடர்ந்து கவனித்துக் கொள்ளும்போது, அவர்களைப் பார்த்துக் கொள்ளும் உறவினர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்; நிதி வசதியும் குறையும். சில சமயங்களில், செய்யும் தொழிலில் இழப்பும் ஏற்படும். இதன் விளைவாக, முதியோரிடம் மன இறுக்கத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடுபவர்

 மது மற்றும் போதை மருந்துக்கு அடிமை ஆகி வரும் இளைஞர்கள்

 முதியோர்களின் சொத்துக்காக ஆசைப்பட்டு, பொய்யாக முதியோரை கவனித்துக் கொள்ளும் உறவினர்கள்.

என்னதான் தீர்வு ?


 வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுடன் சமூக நலத்துறையின் வாயிலாகவும் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் வாயிலாகவும், நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும். முடிந்தளவுக்கு, அவர்களுக்கு வேலை பெற்றுத் தர உதவ வேண்டும்

 மேலும், விருப்பமுள்ள, படித்த இளைஞர்களுக்கு, வங்கியின் வாயிலாக நிதி உதவி பெற உதவ வேண்டும்

 மதுப்பழக்கம் உள்ள இளைஞர்களுக்கு, மருத்துவமனைக்கு சென்று தக்க சிகிச்சை பெற உதவ வேண்டும். குடிப்பழக்கத்தை கைவிட உளவியல் நிபுணர் வாயிலாக, இளைஞர்களுக்கு இலவச ஆலோசனை வழங்க வேண்டும்

 முதியோரை அவமதித்தல், நிதி வசதி படைத்த பணக்காரக் குடும்பங்களிலும் நடைபெற்று தான் வருகிறது. இதைத் தவிர்க்க முதியோர், நல்ல குடும்ப சூழ்நிலையிருக்கும் போதே, உயில் எழுதி வைத்துவிடுவது நல்லது.

மேலும், பொய் கையெழுத்து யார் யார் இடுவர் என்பதை ஓரளவிற்கு தெரிந்து, வங்கி மேலாளருக்கு இதுபற்றி தெரிவித்து விட்டால், மேலாளர் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவார்.

 நோயுற்று, தொடர் சிகிச்சை பெறும் முதியோருக்கு, மாதத்திற்கு ஒருமுறை மருந்தை இலவசமாக இல்லம் சென்று அரசு கொடுக்கலாம் மற்றும் முதியோருக்கு தேவையான கண் கண்ணாடி, காது கேட்கும் கருவி, பல் செட் மற்றும் கைத்தடி போன்ற உபகரணங்களை, இலவசமாக கொடுக்க அரசு முன் வரலாம்.

 ஐ. நா., சபை, முதியோருக்கெதிரான கொடுமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ம் தேதியை, 'முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்ச்சி ஊட்டும்' நாளாக, 2006ம் ஆண்டிலிருந்து அனுசரிக்கிறது. 'முதியோர் அவமதித்தலை' எதிர்த்து, பள்ளி மாணவ - மாணவியர் ஜூன் 15ம் தேதி அன்று, உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம்.

ஹெல்பேஜ் இந்தியா' எனும் தொண்டு நிறுவனம், 2014ல் நடத்திய கணக்கெடுப்பில், கிட்டத்தட்ட 32 சதவீத முதியோர் இளைய சமுதாயத்தினரால் அவமதிக்கப்படுகின்றனர் அல்லது மரியாதை இல்லாமல் நடத்தப்படுகின்றனர் என தெரியவந்து உள்ளது.

என்ன உத்தரவாதம்?


இதைவிட இன்னமும் அதிர்ச்சி ஊட்டும் செய்தி... 56 சதவீத முதியோர், தன் மகன்களால் புறக்கணிக்கப்படுகின்றனர் மற்றும் 23 சதவீத முதியோர், தன் மருமகள்களால் புறக்கணிக்கப்படுகின்றனர்.

ஏதோ ஒரு வீட்டில், வயதானவர்களை சரியாக கவனிப்பதில்லை அல்லது புறக்கணிக்கப்படுகின்றனர் என்று எண்ணி விடக்கூடாது. அதுபோலவே, நம் வீட்டில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஆகையால், இது ஒரு வீட்டுப் பிரச்னையாக யாரும் எண்ணக்கூடாது. இதுவே, விரைவில் ஒரு சமுதாயப் பிரச்சனையாக உருவெடுத்தாலும், வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. முதியோரை மதிப்போம்; அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வோம்.

அவர்கள் இன்றி, அவர்களின் அனுபவம் இன்றி நாம் இல்லை, நம்மால் திறம்பட்ட வாழ்க்கையை நடத்த முடியாது என்பதை உளப்பூர்வமாகப் புரிந்துகொண்டு, அவர்கள் நிம்மதியாக, கவுரவமாக வாழ அனைவரும் துணைபுரிவோம்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us