Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ உ.பி.,யில் பா.ஜ., நிர்வாகிகள் மாற்றம்? தேர்தல் சறுக்கலால் தலைமை அதிரடி!

உ.பி.,யில் பா.ஜ., நிர்வாகிகள் மாற்றம்? தேர்தல் சறுக்கலால் தலைமை அதிரடி!

உ.பி.,யில் பா.ஜ., நிர்வாகிகள் மாற்றம்? தேர்தல் சறுக்கலால் தலைமை அதிரடி!

உ.பி.,யில் பா.ஜ., நிர்வாகிகள் மாற்றம்? தேர்தல் சறுக்கலால் தலைமை அதிரடி!

ADDED : ஜூலை 18, 2024 12:20 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லக்னோ: உத்தர பிரதேச லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததுடன், பெரும் சறுக்கலை சந்தித்த நிலையில், கட்சியின் மாநிலத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை மாற்ற, பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. தன் பதவியை ராஜினாமா செய்ய மாநிலத் தலைவர் புபேந்திர சவுத்ரி முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்து சாதனை படைத்த யோகி ஆதித்யநாத், கட்சியிலும் முக்கிய தலைவராக உருவெடுத்து வருகிறார்.

அதிர்ச்சி


லோக்சபாவுக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், பா.ஜ., 36 இடங்களில் மட்டுமே வென்றது; கடந்த தேர்தலில் வென்ற 30 தொகுதிகளை இழந்தது.

இது, கட்சித் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், இந்த முடிவுகள் கட்சியில் அனைத்து நிலைகளிலும் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளன.

சமீபத்தில் நடந்த கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், தேசிய தலைவர் நட்டா முன்னிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஆராயப்பட்டது. அப்போது, பல்வேறு தரப்பினரும் தங்களுடைய கருத்துகளை முன்வைத்தனர்.

அந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, 'கட்சியை விட ஆட்சி பெரியதல்ல. தனிநபரை விட கட்சிதான் பெரியது.

கட்சி தான், இந்த ஆட்சி, பதவியை நமக்கு அளித்தது. நான் முதலில் கட்சித் தொண்டன்; அதன்பிறகே துணை முதல்வர் பதவி எல்லாம்' என ஆவேசமாக பேசினார்.

மவுரியாவின் பேச்சு, கட்சியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. யோகி ஆதித்யநாத்தை குறி வைத்து அவர் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.

அதீத நம்பிக்கை


முதல்வரின் நிர்வாக நடவடிக்கைகளே, கட்சியின் தோல்விக்கு காரணம் என்று பரவலாக கூறப்படுகிறது.

அந்தக் கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், மிகவும் அதீத நம்பிக்கையுடன் இருந்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறினார்.

இந்நிலையில் கட்சித் தலைவர் நட்டாவை, டில்லியில் நேற்று முன்தினம் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார் மவுரியா. இது, பல யூகங்களை உருவாக்கியுள்ளது.

வரும் 2027ல் உ.பி., சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதற்குள் கட்சியிலும், ஆட்சியிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என, ஆங்காங்கே குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.

இந்நிலையில் இரண்டு நாட்களில், கட்சித் தலைவர் நட்டாவை இரண்டு முறை கேசவ் பிரசாத் மவுரியா சந்தித்துள்ளது, பல சந்தேகங்களை எழுப்பியது. இதனால், அடுத்த சில நாட்களில் உத்தர பிரதேசத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, கட்சியின் மாநிலத் தலைவர் புபேந்திர சவுத்ரி, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது உத்தர பிரதேசத்தில் லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய புபேந்திர சவுத்ரி முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பை தொடர்ந்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். உத்தர பிரதேச விவகாரம் தொடர்பாக இருவரும் பேசியதாக தெரிகிறது.

புதிய தலைவர்

வரும் 2027 சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், கட்சியின் மாநில நிர்வாகிகளை மாற்றுவதற்கு கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, மாநிலத் தலைவர் புபேந்திர சவுத்ரி மாற்றப்படுவார் என்று பெரிதும் நம்பப்படுகிறது. அவர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்.

இந்த லோக்சபா தேர்தலில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஓட்டுகள் குறைந்ததே, பா.ஜ.,வின் தொகுதிகள் எண்ணிக்கை சறுக்கலுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அதனால், ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்த ஒருவரை மாநிலத் தலைவராக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us