ராமேஸ்வரத்தில் கல்வி சேவை துவக்கப்படும்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தகவல்
ராமேஸ்வரத்தில் கல்வி சேவை துவக்கப்படும்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தகவல்
ராமேஸ்வரத்தில் கல்வி சேவை துவக்கப்படும்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தகவல்
UPDATED : ஜூலை 18, 2024 10:26 AM
ADDED : ஜூலை 18, 2024 02:09 AM

ராமேஸ்வரம்:''ராமேஸ்வரத்தில் விரைவில் கல்வி சேவை திட்டம் துவக்கப்படும்,'' என, காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமநாத சுவாமி கோவிலுக்கு உலகம் முழுதும் உள்ள மக்கள் வந்து தரிசிக்கின்றனர். இங்குள்ள கடலே, அக்னி தீர்த்தமாக உள்ளதால் பக்தர்கள் நீராடி தரிசிக்கின்றனர்.
நல்ல திட்டங்கள்
ஆதிசங்கரர் தரிசனம் செய்த 12 ஜோதிர் லிங்க தலங்களில் இதுவும் ஒன்று. காஞ்சி மகா பெரியவர் பலமுறை இங்கு வந்து அபிஷேகம் செய்து தரிசனம் செய்துள்ளார்.
கடந்த 2023ல், காசி யாத்திரைக்காக தனுஷ்கோடியில் மணல் எடுத்து சிவலிங்கம் வடிவமைத்து, காசி கங்கை நதியில் கரைத்து, அங்கிருந்து கலசத்தில் கங்கை நீர் எடுத்து வந்து, இன்று ராமநாத சுவாமிக்கு அபிஷேகம், பூஜை செய்தேன்.
தேச ஒற்றுமைக்கு மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். ராமேஸ்வரத்தில் மக்களுக்கு கல்வி சேவை மற்றும் பல நல்ல திட்டங்கள் விரைவில் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக காலை 10:20 மணிக்கு, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோவிலுக்கு வந்தார். கோவில் தக்கார் பழனிகுமார், இணை ஆணையர் சிவராம்குமார், கோவில் குருக்கள் உள்ளிட்டோர் பூரணகும்ப மரியாதை அளித்தனர். பின், சுவாமி சன்னிதி கருவறைக்குள் சென்று, கங்கை நீரில் அபிஷேகம் செய்து தீபாராதனை நடத்தி, விஜயேந்திரர், சுவாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்மன் சன்னிதிக்குள் சென்று தரிசனம் செய்தார்.
அம்மனுக்கு தங்க செயின்
ராமநாத சுவாமிக்கு வில்வ இலை பொறித்த தங்க நெற்றிப்பட்டையும், பர்வதவர்த்தினி அம்மனுக்கு 3 சவரனில் மாங்காய் வடிவம் பொறித்த தங்க சங்கலியையும், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.
கடந்தாண்டு, விஜயேந்திரர் கருவறைக்குள் செல்ல சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தவிர்க்க, நேற்று பணியில் உள்ள கோவில் குருக்கள் தவிர வேறு யாரையும், சன்னிதியில் நிற்க அனுமதிக்கவில்லை.
மேலும், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருவறைக்குள் அபிஷேகம் பூஜை செய்த போது திரை மூடப்பட்டது. அப்போது காஞ்சி மடம் பக்தர்கள் திரையை விலக்கும் படியும், சன்னிதி முன் நிற்க அனுமதிக்கவும் வலியுறுத்தினர்.
இவர்களை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் இருகரம் கூப்பி, அமைதி காக்கும்படி வேண்டினார்.