லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோல்வி அஜித் பவார் உறவே காரணம்: ஆர்.எஸ்.எஸ்., வார இதழ் குற்றச்சாட்டு
லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோல்வி அஜித் பவார் உறவே காரணம்: ஆர்.எஸ்.எஸ்., வார இதழ் குற்றச்சாட்டு
லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோல்வி அஜித் பவார் உறவே காரணம்: ஆர்.எஸ்.எஸ்., வார இதழ் குற்றச்சாட்டு
UPDATED : ஜூலை 18, 2024 03:23 AM
ADDED : ஜூலை 17, 2024 11:52 PM

மும்பை: 'லோக்சபா தேர்தலில் மஹாராஷ்டிராவில் பா.ஜ., தோல்வியடைய, அஜித்பவாருடனான கூட்டணியே காரணம்' என, ஆர்.எஸ்.எஸ்.,சின் வார இதழ் குற்றஞ்சாட்டியுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில், பா.ஜ., 9, சிவசேனா 7, அஜித் பவாரின் தேசியவாத காங்., 1 இடத்தில் வெற்றி பெற்றன. கூட்டணிக்கு மொத்தம் 17 இடங்கள் கிடைத்தன.
கட்டுரை
எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணியில், காங்கிரஸ் 13, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 9, தேசியவாத காங்., சரத்சந்திர பவார் பிரிவு 8 இடங்களிலும் வென்றன. இண்டியா கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது.
லோக்சபா தேர்தலில் மஹாராஷ்டிராவை பெரிதும் நம்பியிருந்த பா.ஜ.,வுக்கு இது பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்த தோல்விக்கு அஜித் பவாருடன் வைத்திருந்த கூட்டணியே காரணம் என, ஆர்.எஸ்.எஸ்., சார்பில் வெளியிடப்படும் 'விவேக் சாப்தாஹிக்' என்ற மராத்தி பத்திரிகை கட்டுரை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
பல்வேறு தரப்பினரிடம் நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையில், 'தொண்டர்கள் மனம் தளரவில்லை; ஆனால் குழம்பியுள்ளனர்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரையில் கூறப்படுவதாவது:
மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் பா.ஜ., வைத்த கூட்டணி, ஹிந்துத்வாவை அடித்தளமாக கொண்டதால் அதை இயற்கையானது என மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
ஆனால், தேசியவாத காங்கிரசின் அஜித் பவாருடன் வைத்த கூட்டணியை அவர்கள் ஏற்கவில்லை. தேர்தல் தோல்வி குறித்து யார் பேசினாலும், இந்த கருத்தையே முன்வைக்கின்றனர்.
தொழிலாளர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரையும் உருவாக்கும் ஒரே கட்சி பா.ஜ., தான். ஆனால், இந்த தேர்தலில் தொண்டர்களின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை.
அஜித் பவாருடனான கூட்டணி வேண்டாம் என கட்சியின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
முக்கியத்துவம்
தொண்டர்களின் கருத்துக்கு மஹாராஷ்டிர பா.ஜ., மதிப்பளிக்கவில்லை. தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் சரியான தொடர்பு இல்லாததும் தோல்விக்கு காரணம். மத்திய பிரதேசத்தில், பா.ஜ., வெற்றி பெற அக்கட்சியின் முடிவெடுக்கும் திறன்தான் உதவியது.
அதே சமயம், அங்கு பா.ஜ., தொண்டர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும் வெற்றிக்கு காரணமாகும். இந்த அணுகுமுறை மஹாராஷ்டிராவில் இருந்திருந்தால் பா.ஜ., நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.