யேசுதாஸ் பிறந்தநாள்: சபரிமலையில் பூஜை
யேசுதாஸ் பிறந்தநாள்: சபரிமலையில் பூஜை
யேசுதாஸ் பிறந்தநாள்: சபரிமலையில் பூஜை
ADDED : ஜன 13, 2024 12:29 AM

சபரிமலை: கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ், 84. இவர், 1961ல் மலையாள திரைப்படத்தில் முதல்முறையாக பாடினார். அதன் பின், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் பாடி வருகிறார்.
கர்நாடக இசைக்கச்சேரிகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார். பிறப்பால் கிறிஸ்துவரான யேசுதாஸ், ஹிந்து கடவுள்கள் மீது பல்வேறு பக்திப் பாடல்களை பாடியுள்ளார்.
இவர் பாடிய அய்யப்ப சுப்ரபாதம் மற்றும் ஹரிவராசனம் பாடல்கள் ஒலித்த பின் தான், சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை திறப்பும், அடைப்பும் இன்று வரை நடக்கிறது.
இவர் தற்போது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இங்கு இருந்தவரை, ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
யேசுதாசின் பிறந்த நாள் ஜன., 10ல் கொண்டாடப்பட்டது. மலையாள காலண்டர் படி, அவரது நட்சத்திர பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையடுத்து, சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஏற்பாடு செய்திருந்தது.
காலை கோவில் திறந்ததும் கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், சஹஸ்ரநாம அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன.
இதன் பிரசாதங்கள், அமெரிக்காவில் உள்ள யேசுதாசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தேவசம் போர்டு நிர்வாகிகள் தெரிவித்தனர்.