கல்யாணம், காதுகுத்து பற்றியா பேசுவர்?
கல்யாணம், காதுகுத்து பற்றியா பேசுவர்?
கல்யாணம், காதுகுத்து பற்றியா பேசுவர்?
ADDED : பிப் 12, 2024 06:31 AM

'நான்கு அரசியல்வாதிகள் ஒன்று கூடி பேசினால், கல்யாணம், காதுகுத்து பற்றியா பேசுவர். அரசியல் தான் பேசினோம். லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசித்தோம்,'' என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கோபத்துடன் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசிடம் இருந்து கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரண நிதியாக, ஒரு ரூபாய் கூட வரவில்லை. கர்நாடகாவுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டோம் என்று, பார்லிமென்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.
கர்நாடகாவில் இருந்து, ராஜ்யசபா எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்ட அவர், பொய் சொல்வது வருத்தம் அளிக்கிறது. வறட்சி பாதித்த பகுதிகளை, மத்திய குழுவினர் ஆய்வு செய்து சென்றனர். ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
ராஜினாமா ஏற்பு
உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரதாப் ரெட்டி, தனிப்பட்ட காரணங்களுக்காக, ராஜினாமா செய்து உள்ளார்.
எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய தலைவர் பதவி கிடைத்து உள்ளது. அடுத்து கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவி கிடைக்கும். வாரிய தலைவர்களை தேர்வு செய்யும் விஷயத்தில், காங்கிரஸ் தலைவர்கள் இடையே, கருத்து வேறுபாடு இருந்தது உண்மை தான். ஆனால் இப்போது இல்லை.
அமைச்சர் முனியப்பா வீட்டில், காலை உணவு சாப்பிட சென்றது தவறா. நான்கு அரசியல்வாதிகள் ஒன்று கூடி பேசினால், கல்யாணம், காதுகுத்து பற்றியா பேசுவர். அரசியல் தான் பேசினோம். லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசித்தோம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடகா வந்து உள்ளார்; அவரை வரவேற்கிறேன். தேர்தல் நேரத்தில் மட்டும் தான், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கர்நாடகாவின் ஞாபகம் வரும். பா.ஜ., தலைவர்கள் அவர்கள் செய்வதை செய்யட்டும். நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வோம். காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படும்.
40 சதவீத கமிஷன்
அரசு மீது, ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா 40 சதவீத கமிஷன், குற்றச்சாட்டு கூறி உள்ளார். இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறினார்.
பா.ஜ., ஆட்சியிலும் 40 சதவீத கமிஷன் வாங்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டனரா. இதுபற்றி பேச அசோக்கிற்கு, தார்மீக உரிமை கிடையாது. ஈஸ்வரப்பாவை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அவர் பேசுவது எல்லாம் சரியா.
இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர் -.