மாண்டியா தொகுதி சுமலதா வழியை விடுவாரா, மறிப்பாரா?
மாண்டியா தொகுதி சுமலதா வழியை விடுவாரா, மறிப்பாரா?
மாண்டியா தொகுதி சுமலதா வழியை விடுவாரா, மறிப்பாரா?
ADDED : பிப் 12, 2024 06:37 AM
பா.ஜ., ஆதரவுடன், பாதுகாப்பு கோட்டையான மாண்டியா லோக்சபா தொகுதியை கைப்பற்றலாம் என, ம.ஜ.த., ஆவலாக உள்ளது. இதற்கு இன்னாள் எம்.பி., சுமலதா அம்பரிஷ் வழி விடுவாரா அல்லது வழியை மறிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின் போது, கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு இருந்தது. மாண்டியா தொகுதியில் அன்றைய முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட்டார். ஆனால் பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., தொண்டர்கள் பலரும், சுயேச்சை வேட்பாளர் சுமலதா அம்பரிஷை ஆதரித்து, வெற்றி பெற வைத்தனர்.
தந்தை - தாத்தா
மாண்டியா ம.ஜ.த.,வின் பாதுகாப்பு கோட்டையாகும். இத்தகைய தொகுதியில், நிகில் தோற்றதால் தேவகவுடா, குமாரசாமி வருத்தம் அடைந்தனர். அதன்பின் 2023 சட்டசபை தேர்தலில், ராம்நகர் தொகுதியில் போட்டியிட்டார். தந்தைக்கும், தாத்தாவுக்கும் அரசியல் ரீதியில், மறுவாழ்வளித்த ராம்நகர், நிகிலை ஏற்கவில்லை.
இம்முறை லோக்சபா தேர்தலில், மாண்டியாவில் மகனை களமிறக்கி, வெற்றி பெற வைக்க வேண்டும் என, குமாரசாமி ஆர்வம் காண்பிக்கிறார். எனவே, மாண்டியாவை தங்கள் கட்சிக்கு விட்டு தரும்படி, பா.ஜ.,விடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த தொகுதியில் பா.ஜ.,வுக்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லாததால், ம.ஜ.த.,வுக்கு விட்டு கொடுக்க ஆலோசித்து வருகிறது.
ஆனால் இதற்கு எம்.பி., சுமலதா அம்பரிஷ், இடையூறாக நிற்கிறார். மாண்டியாவில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து, சுமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பா.ஜ., குழப்பம்
மாண்டியாவை கூட்டணி கட்சிக்கு தருவதா அல்லது சுமலதாவை தன் கட்சி சார்பில் களமிறக்குவதா என, பா.ஜ., குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்த நிலவரங்களால் இரு கட்சியிலும் தலைவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
இறுதி வினாடியில், ம.ஜ.த.,வுக்கு கிடைக்கலாம் என கருதப்படுகிறது. இத்தொகுதி, தினமும் டென்ஷனை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் பரப்பப்படுகிறது.
பா.ஜ., சுமலதாவுக்கு ஆதரவு தெரிவித்தால், ம.ஜ.த., கண்டிப்பாக அதிருப்தி அடையும். இதனால், மாநிலம் முழுதும் பிரசாரத்தில் சுணக்கம் ஏற்படலாம். இதனால், கூட்டணி கட்சி தொண்டர்கள் ஒருங்கிணைந்து வேலை பார்ப்பதில் தடங்கல் ஏற்படலாம்.
ம.ஜ.த.,வுக்கு விட்டு கொடுத்தால், சுமலதாவின் நிலை என்ன என்று கேள்வி எழுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் மாண்டியா தொகுதி என்றாலே தலைவர்களுக்கு தலைவலிதான்
.- நமது நிருபர் -