வங்க தேசத்தை சேர்ந்த அகதிகள் 88 பேர் கைது: ரயில்வே போலீசார் அதிரடி
வங்க தேசத்தை சேர்ந்த அகதிகள் 88 பேர் கைது: ரயில்வே போலீசார் அதிரடி
வங்க தேசத்தை சேர்ந்த அகதிகள் 88 பேர் கைது: ரயில்வே போலீசார் அதிரடி
UPDATED : ஜூலை 29, 2024 11:06 AM
ADDED : ஜூலை 29, 2024 11:04 AM

புதுடில்லி: வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு சட்ட விரோதமாக நுழைய முயன்ற, ரோஹிங்கியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த அகதிகள் 88 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் செபாஹிஜலா மாவட்டத்தில் சர்வதேச எல்லை அமைந்துள்ளது. இதன் அருகே நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக பலர் நம் நாட்டு எல்லைக்குள் நுழைவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதை தடுக்கும் நோக்கில், எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களில், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற, ரோஹிங்கியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த 88 அகதிகளை திரிபுரா மற்றும் வடகிழக்கு எல்லை பகுதியில் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இது குறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது: ஜூன் மாதத்தில் 47 பேரை கைது செய்தோம். ஜூலை மாதம் இதுவரை 41 பேரை கைது செய்துள்ளோம்.
இவர்களில் பெரும்பாலோர் சரியான ஆவணங்கள் இல்லாததால், கைது செய்யப்பட்டனர். அகர்தலாவில் பிடிபட்ட அகதிகள் தாங்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து ரயில் வழியாக கோல்கட்டாவுக்கு சென்று கொண்டிருந்ததாக ஒப்புக்கொண்டனர். குறிப்பாக அசாம், மேகாலயா மற்றும் திரிபுராவில் பல அகதிகளை பிடித்தோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.