பரிசளிப்பதில் மோதல் மனைவி, மாமியார் கொலை
பரிசளிப்பதில் மோதல் மனைவி, மாமியார் கொலை
பரிசளிப்பதில் மோதல் மனைவி, மாமியார் கொலை
ADDED : செப் 01, 2025 04:19 AM
புதுடில்லி : மகனுக்கு பிறந்த நாள் பரிசு தருவது தொடர்பான மோதலில், மனைவி மற்றும் மாமியாரை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டில்லி ரோஹினி பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ். இவரது மனைவி பிரியா சேஹல், 34. இந்த தம்பதிக்கு சிராக், 15, என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கடந்த 28ல் சிராக்கின் பிறந்த நாளையொட்டி, பிரியாவின் வீட்டிற்கு அவரது தாய் குசும் சின்ஹா, 63, வந்திருந்தார்.
அப்போது சிராக்குக்கு பிறந்த நாள் பரிசு அளித்த யோகேஷின் குடும்பத்தினரை பிரியா தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யோகேஷ், வீட்டில் இருந்த கத்திரிக்கோலால் மனைவி பிரியா மற்றும் மாமியார் குசும் ஆகியோரை சரமாரியாக குத்தினார்.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதையடுத்து, வீட்டை பூட்டி விட்டு யோகேஷ் தப்பியோடிவிட்டார்.
இதற்கிடையே பிரியா வீட்டுக்கு சென்ற தாயை, பிரியாவின் சகோதரர் மேகா சின்ஹா போனில் தொடர்பு கொள்ள முயன்றார். தொடர்ந்து சகோதரிக்கும் போன் செய்தார்.
அவரும் போன் அழைப்பை ஏற்காததால், மேகா சின்ஹா உடனடியாக புறப்பட்டு அங்கு வந்தார். அங்கு வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து சென்று பார்த்தபோது உள்ளே பிரியா மற்றும் அவரது தாய் குசும் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
அங்கிருந்த கத்திரிக்கோல் உள்ளிட்டவற்றை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மனைவி மற்றும் மாமியாரை கொன்று விட்டு யோகேஷ் மகனுடன் தப்பி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பகுதியில் சுற்றித் திரிந்த யோகேஷை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பரிசு பொருள் வழங்குவது தொடர்பாக, தன் குடும்பத்தினரை தரக்குறைவாக பேசியதால் மனைவி மற்றும் மாமியாரை கொன்றதாக யோகேஷ் தெரிவித்தார்.