Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மதரஸாக்களுக்கு உத்தராகண்ட் அரசு 'கிடுக்கி'

மதரஸாக்களுக்கு உத்தராகண்ட் அரசு 'கிடுக்கி'

மதரஸாக்களுக்கு உத்தராகண்ட் அரசு 'கிடுக்கி'

மதரஸாக்களுக்கு உத்தராகண்ட் அரசு 'கிடுக்கி'

ADDED : செப் 01, 2025 04:04 AM


Google News
Latest Tamil News
மதரஸாக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சிறுபான்மையினர் கல்வி முறைக்கும் மறு வடிவம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது உத்தராகண்ட் அரசு.

இம்மாநிலத்தில், 'உத்தராகண்ட் மாநில சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் மசோதா 2025' கடந்த 20ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

மதரஸாக்கள் மட்டுமின்றி, சீக்கியர்கள், ஜெயினர்கள், சமணர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் பார்ஸி சமூகத்தினர் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களும் சிறுபான்மையினர் அந்தஸ்து பெற்று, அதற்கான பலன் சென்று சேரும் வகையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அங்கீகாரம் ரத்து மத சிறுபான்மையினருக்கு மட்டுமின்றி, மொழி ரீதியாக சிறுபான்மையினராக உள்ளவர்களும் பயன்பெறும் வகையில் இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி உத்தராகண்டில் குருமுகி மற்றும் பாலி மொழி பேசுவோர் சிறுபான்மையின அந்தஸ்து பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு வரும் நன்கொடைகள், மானியங்கள் மற்றும் பிற நிதிகளின் தவறான பயன்பாடு தடுக்கப்படுவதை இந்த மசோதா உறுதி செய்யும். அதன்படி முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானால், உடனடியாக கல்வி நிறுவனத்துக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

கல்வி நிறுவனங்களை கண்காணிக்க, சிறுபான்மையினர் கல்வி நிறுவன ஆணையமும் அமைக்கப்படவுள்ளது.

அதன்படி புதிதாக கல்வி நிறுவனங்கள் துவங்குவோர், இனி இந்த ஆணையத்திடம் தான் அங்கீகாரம் பெற முடியும். இதற்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், சொசைட்டி சட்டம், டிரஸ்ட் சட்டம் மற்றும் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் முதலில் பதிவு செய்ய வேண்டும்.

நிலம், வங்கி கணக்கு மற்றும் பிற சொத்துகள் கல்வி நிறுவனத்தின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நிதி முறைகேடு, போதிய வெளிப்படைத்தன்மை இல்லாதது, மத மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக ஈடுபடுவது உள்ளிட்ட காரணங்கள் கண்டறியப்பட்டால், அந்த கல்வி நிறுவனத்தின் பதிவு உடனடியாக ரத்தாகும்.

மசோதா ஏன்?


சட்டவிரோதமாக செயல்படும் மதரஸாக்களை மூடவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக உத்தராகண்ட் முதல்வர் தாமி தெரிவித்துள்ளார்.

'மத்திய அரசின் கல்வி உதவித்தொகை, மதிய உணவு திட்டம் ஆகியவற்றில் முறைகேடு மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாதது போன்ற பிரச்னைகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வந்தன.

'இதன் காரணமாகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டது' என, தன் சமூக வலைதளத்தில் தாமி விளக்கம் அளித்துள்ளார்.

அரசு புள்ளிவிபரங்களின்படி உத்தராகண்டில், 450 பதிவு செய்யப்பட்ட மதரஸாக்கள் இயங்கி வருகின்றன. மேலும், கல்வித் துறையின் அனுமதியில்லாமல் 500க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் இயங்கி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

அவற்றில், 200 மதரஸாக்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சட்டவிரோத மதரஸாக்கள் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி சென்றிருக்கக் கூடும் என்ற சந்தேகம், தாமி அரசுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

வரவேற்பும், எதிர்ப்பும் இதற்கிடையே உத்தராகண்ட் மதரஸா போர்டு தலைவர் முப்தி ஷமுன் கஸ்மி, இந்த மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். சிறுபான்மையினரின் கல்வி முறையுடன், தேசிய கல்வி முறையையும் இணைப்பதற்கான பாலமாக இந்த மசோதா இருக்கும் என அவர் வரவேற்றுள்ளார்.

எனினும், மதரஸாக்களை முற்றிலும் ஒழிக்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக பெரும்பாலான முஸ்லிம் தலைவர்கள் விமர்சித்துஉள்ளனர்.

காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வரான ஹரிஷ் ராவத், ஆளும் பா.ஜ., அரசு குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர்களுக்கு 'மதரஸா' என்ற உருது வார்த்தையே பிடிக்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

பா.ஜ.,வோ சிறுபான்மையின மக்களின் மத கல்விக்குள் குறுக்கிடும் வகையில் இம்மசோதா இருக்காது என்றும், அதன் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக மட்டுமே கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

உத்தராகண்ட் அரசு இப்படியொரு நடவடிக்கையை எடுத்திருப்பது முதல் முறை அல்ல. மற்ற மாநிலங்கள் தயங்கிய போது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் உத்தராகண்ட் தான்.

அதே போல், போலி ஹிந்து துறவியர் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் தாமி அரசு தயங்கியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us