சுற்றுலா பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் ஓணம் பண்டிகையால் ஏற்பாடு
சுற்றுலா பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் ஓணம் பண்டிகையால் ஏற்பாடு
சுற்றுலா பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் ஓணம் பண்டிகையால் ஏற்பாடு
ADDED : செப் 01, 2025 05:51 AM
மூணாறு: மூணாறில் இருந்து சுற்றுலாப் பகுதிகளுக்கு ஓணப் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கேரளாவில் நலிவடைந்துள்ள அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருவாயை அதிகரிக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு 'டெப்போ'க்களில் இருந்து விடுமுறை, பண்டிகை, சீசன் ஆகிய நாட்களில் 'பேக்கேஜ்' அடிப்படையில் சுற்றுலாப் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வயநாடு, மலப்புரம், எர்ணாகுளம் உட்பட பல்வேறு 'டெப்போ'க்களில் இருந்து மூணாறுக்கு சுற்றுலாப் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் செப்.5ல் கொண்டாடப்படுகிறது. அந்த விடுமுறையில் மூணாறு வரும் பயணிகள் குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலாப் பகுதிகளை பார்க்க கேரள அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி பழைய மூணாறில் உள்ள பஸ் டெப்போவில் இருந்து பட்ஜெட் சுற்றுலா என்ற பெயரில் காந்தலுார், வட்டவடை, ஆனகுளம், சதுரங்கப்பாறை ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஓணம் பண்டிகையை முன்னிட்டு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பஸ்கள் இயக்கப்படுவதாகவும், தினமும் காலை 9:00 மணிக்கு புறப்பட்டு மாலை 6:00 க்குள் திரும்பும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். டெப்போவில் 91889 33771, 94475 77111 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.