லோக்சபா தேர்தலுக்கு பின் 'பாரத் அரிசி' நிறுத்தம் ஏன்?: சித்தராமையா கேள்வி
லோக்சபா தேர்தலுக்கு பின் 'பாரத் அரிசி' நிறுத்தம் ஏன்?: சித்தராமையா கேள்வி
லோக்சபா தேர்தலுக்கு பின் 'பாரத் அரிசி' நிறுத்தம் ஏன்?: சித்தராமையா கேள்வி
ADDED : ஜூலை 06, 2024 05:10 PM

பெங்களூரு: ''லோக்சபா தேர்தலுக்காக 'பாரத் அரிசி' அறிமுகப்படுத்தினர். தேர்தல் முடிந்த பின், அதை நிறுத்திவிட்டனர்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில், மறைந்த முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன்ராம் நினைவு நாளில், அவரது சிலைக்கு முதல்வர் சித்தராமையா மாலை அணிவித்தார். பின், அவர் அளித்த பேட்டி: கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு கொண்டு வந்த 'அன்ன பாக்யா' திட்டத்தை முடக்குவதற்காக மத்திய அரசு திட்டமிட்டது. மாநில அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, லோக்சபா தேர்தலின்போது, 'பாரத் அரிசி'யை அறிமுகம் செய்தது.
தேர்தல் முடிந்த பின், அதை நிறுத்திவிட்டனர். அவர்களின் கையிருப்பில் அரிசி இருந்தும், எங்களுக்கு தரவில்லை. ஜெகஜீவன்ராம் விட்டு சென்ற பாதையில் நாம் நடப்போம். பசுமை புரட்சியின் முன்னோடி அவர். சுதந்திரத்துக்கு பின், உணவு துறை அமைச்சராக பதவியேற்ற அவர், நாட்டுக்கு உணவு பாதுகாப்பு வழங்கியவர். இவ்வாறு அவர் கூறினார்.