போர் நிறுத்தத்துக்கு நாங்கள்தான் அழைப்பு விடுத்தோம்: பாகிஸ்தான் ஒப்புதல்
போர் நிறுத்தத்துக்கு நாங்கள்தான் அழைப்பு விடுத்தோம்: பாகிஸ்தான் ஒப்புதல்
போர் நிறுத்தத்துக்கு நாங்கள்தான் அழைப்பு விடுத்தோம்: பாகிஸ்தான் ஒப்புதல்
ADDED : ஜூன் 21, 2025 01:41 AM

இஸ்லாமாபாத்: இந்திய ராணுவத்தின் அடுத்தடுத்த தாக்குதல்களை சமாளிக்க முடியாமல், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை நிறுத்தும்படி கோரிக்கை விடுத்ததாக பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்ரல் 22ல் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய படையினர் 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் ஏவுகணை தாக்குதல்களை, மே 7 மற்றும் 8ம் தேதிகளில் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதையடுத்து, இந்திய ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் வாழும் இடங்களை குறிவைத்து, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாக பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவியது.
இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை இந்திய விமானப்படை குறிவைத்து தாக்கியது. இதன் காரணமாக, வேறு வழியின்றி போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது.
உரிமை கோரிய டிரம்ப்
பாகிஸ்தான் ராணுவ டி.ஜி.எம்.ஓ., இந்திய ராணுவத்தின் டி.ஜி.எம்.ஓ.,விடம் தொலைபேசியில் பேசி, இதற்கான அழைப்பை விடுத்தார். இந்த அழைப்பின்படி, இந்தியா தன் ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது.
ஆனால், இந்தியா கேட்டதற்கு இணங்கவே ராணுவ நடவடிக்கையை நிறுத்தியதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இதற்கிடையே, இந்த போர் நிறுத்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதலில் உரிமை கோரினார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இதை மத்திய அரசு மறுத்தது.
சமீபத்தில், டிரம்புடன் நம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசுகையில், அமெரிக்காவின் தலையீடு காரணமாக ராணுவ நடவடிக்கை நிறுத்தப்படவில்லை; பாகிஸ்தான் அரசு தரப்பில் கேட்டுகொண்டதற்கு இணங்கவே தற்காலிக போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதா திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.
இந்நிலையில், பாக்., 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்நாட்டின் துணை பிரதமர் இஷாக் தர் கூறியதாவது:
துரதிர்ஷ்டவசமாக, ராவல்பிண்டியின் நுார் கான், பஞ்சாப்பின் ஷோர்கோட் ஆகிய விமானப்படை தளங்களின் மீது இந்திய படையினர் அடுத்தடுத்து தாக்குதல்களை தொடுத்தனர். இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோவுடன் நான் பேசியது பற்றி சவுதி இளவரசர் பைசல் கேட்டறிந்தார்.
சரி என்றேன்
அப்போது அவர், 'இந்தியா தாக்குதலை நிறுத்தினால், பாகிஸ்தான் நிறுத்தத் தயாரா?' எனக் கேட்டார். அதற்கு நான், 'சரி என்றேன்'. சிறிதுநேரத்தில் பைசல், மீண்டும் என்னை தொடர்பு கொண்டார். அப்போது, என்னிடம் தெரிவித்த அதே கருத்தை, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் எடுத்துரைத்ததாக குறிப்பிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டிக்கும், இஸ்லாமாபாதுக்கும் இடையே உள்ள நுார் கான் விமானப்படை தளம் மற்றும் ஷோர்கோட் விமானப்படை தளங்களை நம் படையினர் தாக்கியதையடுத்தே போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் கோரியதை, அந்நாட்டின் துணை பிரதமர் இஷாக் தர் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார்.