திடீரென முளைத்த 5,000 சமூக ஊடக கணக்குகள்: அசாம் காங்கிரஸ் மீது முதல்வர் சந்தேகம்
திடீரென முளைத்த 5,000 சமூக ஊடக கணக்குகள்: அசாம் காங்கிரஸ் மீது முதல்வர் சந்தேகம்
திடீரென முளைத்த 5,000 சமூக ஊடக கணக்குகள்: அசாம் காங்கிரஸ் மீது முதல்வர் சந்தேகம்
ADDED : ஜூன் 21, 2025 01:40 AM

குவஹாத்தி: முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்ட சமூக ஊடகக் கணக்குகள் அசாம் காங்., கட்சிக்கு ஆதரவாக செயல்படத் துவங்கி இருப்பது, பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.
குற்றச்சாட்டு
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அவர், அம்மாநில காங்., தலைவர் கவுரவ் கோகோய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அழைப்பின்படி, கவுரவ் கோகோய் அந்நாட்டிற்கு சென்று வந்ததாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையில், அசாம் காங்., மீது மீண்டும் ஒரு புகாரை தெரிவித்து இருக்கிறார்.
குவஹாத்தியில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று கூறியதாவது:
அசாம் மாநில காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் வகையில், சமூக ஊடக கணக்குகள் அதிகம் முளைக்க துவங்கியுள்ளன. ஒரே மாதத்தில், 'பேஸ்புக், எக்ஸ்' உள்ளிட்ட சமூகவலைதளங்களில், 5,000 கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளோம்.
அவை, பெரும்பாலும் முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவையாக உள்ளன. 47 நாடுகளில் இருந்து இயக்கப்படுவதாக கூறப்படும் இந்த கணக்குகளில் வங்கதேசம், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். கடந்த ஒரு மாதமாக, அந்த கணக்குகளில் அசாம் காங்., தலைவரை புகழ்ந்து பதிவுகள் வெளியாகி வருகின்றன.
ஆதரவு
அவர்கள், ராகுல் அல்லது அகில இந்திய காங்கிரசின் பதிவுகளை, பகிரவோ அல்லது, 'லைக்' செய்யவோ இல்லை என்பதுதான் ஆச்சரியம்.
அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, அசாம் அரசியலில் வெளிநாட்டு சக்திகளின் ஈடுபாடு அதிகரித்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. 5,000 கணக்குகளில் சிலர் குவஹாத்தியை இருப்பிடமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அவற்றை ஆழமாக ஆராய்ந்தபோது, வங்கதேசத்தில் 700, பாகிஸ்தானில் 350, சவுதியில் 246, குவைத்தில் 86, ஆப்கானிஸ்தானில் இருந்து 35 கணக்குகள் இயக்கப்படுவது தெரிந்தது.
மேலும், வெளியில் இருந்து சிலர் குவஹாத்தியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து, 'யு டியூபர்'கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
அவர்களையும் கண்காணித்து வருகிறோம். அசாம் தவிர, முஸ்லிம் அடிப்படைவாதக் கொள்கைகள், பாலஸ்தீன - ஈரான் ஆதரவு நிலைப்பாட்டு கருத்துகளை யும் அந்த கணக்குகளில் பதிவிட்டு வருகின்றனர்.
அசாமை, வங்கதேசத்தின் ஒரு பகுதியாக இணைக்க பயங்கரவாத சக்திகள் துடித்துக்கொண்டிருக்கின்றன.
எனவே இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம். மத்திய அரசுக்கு இந்தப் பிரச்னை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.