அரபிக்கடலில் ஆமை வடிவத்தில் 'குரும்காட் தீவு'
அரபிக்கடலில் ஆமை வடிவத்தில் 'குரும்காட் தீவு'
அரபிக்கடலில் ஆமை வடிவத்தில் 'குரும்காட் தீவு'
ADDED : ஜன 11, 2024 03:39 AM

வேடிக்கையும், சாகசங்களும் வேண்டும் என்போருக்கு பொருத்தமான இடம் குரும்காட் தீவு.
வேடிக்கை, சாகசங்கள் நிறைந்த விசித்திரமான கடற்கரையை தேடுகிறீர்களா? அதற்கு பொருத்தமான பதில் 'குரும்காட் தீவு' தான். உத்தர கன்னடா மாவட்டத்தின் கார்வாரின் தேவ்பாக் கடற்கரை அமைந்துள்ளது.
டால்பின்களை கண்டறிதல்
இந்த கடற்கரையில் இருந்து அரபிக்கடலில் 2.15 நாட்டிகல் மைலில் ஆமை வடிவில் அமைந்துள்ளது குரும்காட் தீவு. இப்பகுதியில் ஐந்து தீவுகளில் ஒன்றான குரும்காட் தீவு, சாகச நடவடிக்கைகள், டால்பின்களை கண்டறிதல், படகு சவாரிக்கு பெயர் பெற்றது.
இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகசம் விரும்புவோருக்கு சொர்க்கமாக இருக்கும். வார இறுதி நாட்களுக்கு இங்கு வரலாம். நகர வாழ்க்கையின் அனைத்து பரபரப்பையும் தவிர்த்து, இயற்கை அன்னையின் தீண்டப்படாத அழகை அனுபவிக்கவும் இது சிறந்த இடம்.
சிறியவர்களாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் சரி, குரும்காட் தீவு, ஒவ்வொரு வயதினருக்கும் ஓய்வுக்கான சிறந்த இடமாக விளங்குகிறது.
இந்த தீவின் கடற்கரையை ஒட்டி நடந்து சென்றால், அரபிக்கடலை 360 டிகிரி கோணத்திலும் பார்க்கலாம். இந்த தீவில் நரசிம்ம சுவாமி கோவில் அமைந்து உள்ளது. டிசம்பர் - ஜனவரி மாதங்களில் இங்கு பவுர்ணமி அன்று பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தரிசிக்கின்றனர். அப்போது கோவிலில் திருவிழா கொண்டாடப்படும்.
கோடை காலத்திலும், மழை காலத்திலும் இங்கு வருவதை தவிர்க்க வேண்டும். மழை காலத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதால் இந்நேரங்களில் இங்கு வருவதை தவிர்ப்பது நல்லது. செப்டம்பர் முதல் மார்ச் வரை இங்கு வருவது சிறந்தது.
எப்படி செல்வது?
கடலோர பகுதி என்பதால், பெங்களூரில் இருந்து விமானம் மூலம் கோவா செல்லலாம். அங்கிருந்து, 90 கி.மீ., துாரத்தை, 2:15 மணி நேரத்தில் கார்வார் கடற்கரை வந்தடையலாம். மங்களூரு விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக 210 கி.மீ., ஐந்து மணி நேரம் பயணிக்க வேண்டும்.
ரயிலில் வருவோர் மங்களூரு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கார்வார் ரயில் நிலையத்துக்கு வர வேண்டும். சாலை வழியாக செல்வோர், அரசு அல்லது தனியார் பஸ்கள் மூலம் கார்வார் செல்லலாம்.
கார்வாரில் இருந்து கேப்கள், டாக்சிகள் இயக்கப்படுகின்றன. கடற்கரை அருகில் தேவ்பக் கடற்கரை ஜங்கிள் லாட்ஜ் மற்றும் ரிசார்ட்கள் அமைந்துள்ளன.
- நமது நிருபர் -