டில்லியில் மாலை நேர ஏசி பஸ் சேவை ஜூலையில் துவக்க சுற்றுலா துறை திட்டம்
டில்லியில் மாலை நேர ஏசி பஸ் சேவை ஜூலையில் துவக்க சுற்றுலா துறை திட்டம்
டில்லியில் மாலை நேர ஏசி பஸ் சேவை ஜூலையில் துவக்க சுற்றுலா துறை திட்டம்
ADDED : ஜூன் 13, 2025 08:36 PM
புதுடில்லி:டில்லியில் விரைவில், பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் போர் வீரர் நினைவிடம் வரை, மாலை நேரத்தில், ஏசி பஸ் விட, சுற்றுலா துறையினர் முடிவு செய்துள்ளனர்.
'எங்கேயும் ஏறலாம்; எங்கேயும் இறங்கலாம்' என்ற ரீதியில், சுற்றுலா பயணியரை கருத்தில் கொண்டு, புதிய ஏசி பஸ் விட, டில்லி மாநில அரசு முடிவு செய்தது. அது, கொரோனா தொற்றால் முடியாமல் போனது.
இப்போது, டில்லி முதல்வர் ரேகா குப்தா, தன் பட்ஜெட் உரையில், மாலையில் பிக்னிக் ஏசி பஸ் சேவை துவக்கப்படும் என அறிவித்தார். அதன் படி, அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, போக்குவரத்து துறையினர் கூறியதாவது:
பிரதமர் அருங்காட்சியத்திலிருந்து போர் வீரர் நினைவிடம் வரை, மாலை நேரத்தில், ஏசி பஸ் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் சேவை, ஜூலை மத்தியில் துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா பயணியரை கருத்தில் கொண்டு, இந்த சேவை விரைவில் துவக்கப்பட உள்ளது. அதற்காக, டில்லி போக்குவரத்து கழகத்திடம் இருந்து புதிய, 9 மீட்டர் எலக்ட்ரிக் பஸ்களை வாங்க உள்ளோம்.
பிரதமர் அருங்காட்சியகம், மாலை 6:00 மணிக்கு மேல் மூடப்பட்டு விடும் என்பதால், அந்த இடத்திலிருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு இந்த பஸ் சேவை, வரப்பிரசாதமாக இருக்கும்.
இதற்கான கட்டணமாக, பெரியவர்களுக்கு, 500 ரூபாய் கட்டணம், வயது 6 - 12 வரையுள்ள குழந்தைகளுக்கு, 300 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது.
இந்த பஸ்சில், ஒரு சுற்றுலா வழிகாட்டியும் இருப்பார். அவர், டில்லி மாநகரின் அழகையும், காணும் இடங்களின் முக்கியத்துவத்தையும் கூறிய படியே பயணிப்பார்.
சுற்றுலா பயணியர் மத்தியில் இந்த பஸ்சுக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து, பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.