புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்
புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்
புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்
ADDED : பிப் 25, 2024 01:55 AM

புதுடில்லி: புதிய குற்றவியல் சட்டங்கள், வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துஉள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட, இந்திய தண்டனைச் சட்டம் - 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் - 1898, இந்திய சாட்சியச் சட்டம் - 1872 ஆகியவற்றுக்கு பதில், தற்போதைய கால கட்டத்துக்கு ஏற்ற வகையில், மூன்று புதிய மசோதாக்களை, பார்லிமென்டில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
ஒப்புதல்
இதன்படி, 'பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய ஆதிநியம், பாரதிய நியாய சன்ஹிதா' ஆகிய மூன்று மசோதாக்களை, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா லோக்சபாவில் அறிமுகம் செய்தார்.
இந்த மூன்று மசோதாக்களை ஆய்வு செய்த பார்லி., நிலைக்குழு சில திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரை செய்தது.
இதன்படி பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு, மூன்று மசோதாக்களுக்கும், கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த குளிர் கால கூட்டத்தொடரின் போது, பார்லி., ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாக்களுக்கு, டிச., 25ல், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்நிலையில், 'புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்' என, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.
எனினும், சாலை விபத்தை ஏற்படுத்தி தப்பியோடும் லாரி டிரைவர்களுக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையிலான சட்டப்பிரிவு மட்டும் அமலுக்கு வராது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சட்டப் பிரிவுக்கு எதிராக, டில்லியில், கடந்த ஆண்டு லாரி டிரைவர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய அம்சங்கள்
இந்த புதிய சட்டங்களின்படி, வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். போலீஸ் விசாரணை, 180 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையை துவங்க வேண்டும். விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் இறுதி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
திருமணம், வேலை, பதவி உயர்வு போன்ற காரணங்களுக்காக அல்லது அடையாளத்தை மறைத்து, பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது குற்றமாக கருதப்படும். சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்படும் என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த சட்டங்களில் உள்ளன.