ஆச்சரியப்பட வைக்கும் எட்டு சுற்று தேசாய் கோட்டை
ஆச்சரியப்பட வைக்கும் எட்டு சுற்று தேசாய் கோட்டை
ஆச்சரியப்பட வைக்கும் எட்டு சுற்று தேசாய் கோட்டை
ADDED : ஜன 25, 2024 04:26 AM
சித்ரதுர்காவின் ஏழு சுற்று கற்கோட்டை மிகவும் பிரபலமானது. அதுபோன்று பெலகாவியில் எட்டு சுற்று தேசாய் கோட்டை உள்ளது. இதன் தொழில்நுட்பம், வல்லுனர்களையே ஆச்சரியப்பட வைக்கிறது.
கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோட்டைகள் உள்ளன. பாகல்கோட், சித்ரதுர்கா, பெலகாவி, மைசூரு, கதக் என பல இடங்களில் கோட்டைகள் சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன.
பெலகாவி, சவதத்தியில் பிரசித்தி பெற்ற ரேணுகா எல்லம்மா கோவில் உள்ளது. சவதத்தி ஒரு காலத்தில், அரச வம்சத்தினரின் பாதுகாப்பு இடமாக இருந்தது.
சாட்சி
பெரும்பாலான மஹாராஜாக்கள், ஆட்சி செய்த அடையாளங்கள் இப்போதும் சாட்சியாக உள்ளன. இவற்றில் எட்டு சுற்று கோட்டையும் ஒன்றாகும். 18ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அடர்த்தியான காடு, மரம், செடி, கொடிகள் நிறைந்த மலை மீது கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அடர்த்தியான வனப்பகுதி என்பதால், பாதுகாப்புக்காகவும், எதிரிகளை கண்காணிக்கவும் இந்த கோட்டையை கட்டினராம்.
கடந்த 1743 மற்றும் 1751ன் இடையே, நவல்குந்தின், ஷிரசங்கி சமஸ்தானத்தின் ஜெயப்பா தேசாய், இந்த கோட்டையை கட்டினார். 1777 - 1782ம் ஆண்டு காலத்தில், மைசூரின் ஹைதர் அலி, தேசாய் கோட்டை மீது தாக்குதல் நடத்தி, ஏராளமான சொத்துகளை கொள்ளையடித்தார்.
அது மட்டுமின்றி ஜெயப்பாவிடம், இந்த கோட்டையை வரியாக பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
120 அடி உயரம்
கிழக்கு திசையை நோக்கி, பிரதான கதவு கொண்டுள்ள இக்கோட்டை, 120 அடி உயரம் உள்ளது. 10 ஏக்கர் விசாலமான பகுதியில் கோட்டை கட்டப்பட்டுள்ளது. எட்டு சுற்றுகள் கொண்டுள்ளன. 60 அடி உயரமான மதில் சுவர்கள், கற்கதவுகள், கண்காணிப்பு டவர்கள் என, இங்குள்ள வசதிகள், இன்றைய அதிநவீன தொழில் நுட்பங்களுக்கு சவால் விடும் வகையில் உள்ளன.
கோட்டைக்குள் நுழைந்து 59 படிகளில் ஏறினால், கோட்டையின் நடுப்பகுதியில் சிரசங்கி சமஸ்தானத்தின் குலதெய்வம் காடு சித்தேஸ்வரர் கோவிலை காணலாம். இங்கு இன்றைக்கும், சித்தேஸ்வரருக்கு தினமும் பூஜை நடக்கிறது.
அன்று ராஜாக்களுக்கு பாதுகாப்பு இடமாக இருந்த, தேசாய் கோட்டை தற்போது சுற்றுலா தலமாக, அனைவரையும் கவர்ந்துள்ளது.
தற்போது கோட்டையை சுற்றிலும், ஊர் உருவாகியுள்ளது. வீடு, பள்ளிகள், வர்த்தக மையங்கள் கட்டப்பட்டுள்ளன. சுற்றுலா பயணியர் எண்ணிக்கையும் அதிகரித்துஉள்ளது.