ஐ.பி.எல்., 18வது சீசன் இன்று துவக்கம்; வருண் 'சுழல்' புயலா...கோலி ரன் மழையா?
ஐ.பி.எல்., 18வது சீசன் இன்று துவக்கம்; வருண் 'சுழல்' புயலா...கோலி ரன் மழையா?
ஐ.பி.எல்., 18வது சீசன் இன்று துவக்கம்; வருண் 'சுழல்' புயலா...கோலி ரன் மழையா?
ADDED : மார் 22, 2025 05:54 AM

கோல்கட்டா: ஐ.பி.எல்., தொடரின் முதல் போட்டியில் இன்று கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம்.
ஐ.பி.எல்., 18வது சீசன் இன்று துவங்குகிறது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் கோல்கட்டா அணி, பெங்களூருவை சந்திக்கிறது.
கேப்டன் ரஹானே
'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணியில் ஷ்ரேயஸ் இல்லாதது பின்னடைவு. இவரை ஏலத்தில் ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் அணி தட்டிச் சென்றது. அடிப்படை விலையான ரூ. 1.5 கோடிக்கு வாங்கப்பட்ட ரஹானே இம்முறை கோல்கட்டா கேப்டனாக களமிறங்குகிறார்.
ரூ. 23.75 கோடிக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் 'தலைமை' வாய்ப்பை எதிர்பார்த்தார். ஆனால், இந்தியா, ராஜஸ்தான் அணிகளுக்கு ஏற்கனவே கேப்டனாக இருந்த அனுபவம் ரஹானேவுக்கு 36, சாதகமாக அமைந்தது.
கடந்த முறை 'ஆல்-ரவுண்டராக' மிரட்டிய ரசல் (222 ரன், 19 விக்கெட்) மீண்டும் கைகொடுக்கலாம். 'பினிஷிங்'பணிக்கு ரிங்கு சிங் உள்ளார். காம்பிர் விலகியநிலையில், புதிய ஆலோசகர் டுவைன் பிராவோ, வியூகம் வகுக்க காத்திருக்கிறார்.
'சுழல்' ஜாலம்
வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், மொயீன் அலி என மூன்று 'ஸ்பின்னர்'கள் இருப்பதுபலம். கடந்த ஐ.பி.எல்., தொடரில் வருண் சக்ரவர்த்தி 21, நரைன் 17 விக்கெட் வீழ்த்தினர்.
சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபியில் 'சுழல் மாயாவி' வருண், 9 விக்கெட் (3 போட்டி) கைப்பற்றி, இந்திய அணியின் கோப்பை கனவை நனவாக்கினார். இவரது 'சுழல்' ஜாலம் கைகொடுத்தால், கோல்கட்டா எளிதில் வெற்றி பெறலாம்.
ரஜத் ராஜ்யம்
பெங்களூரு அணி இம்முறை ரஜத் படிதர் தலைமையில் களம் காண்கிறது. கடந்த ஆண்டு 5 அரைசதம் உட்பட 395 ரன் (ஸ்டிரைக் ரேட் 177.13) எடுத்த இவர், பெங்களூரு'பிளே-ஆப்' சுற்றை எட்ட உதவினார். கேப்டன் சுமை பாதிக்காத பட்சத்தில், மீண்டும்விளாசலாம். 'கிங்' கோலி அருமையான 'பார்மில்' இருப்பதுபலம். தொடர்ந்து 18வது ஆண்டாக பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார்.
கடந்த ஆண்டு ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன் (741) குவித்தார். சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபியில் 218 ரன் (5 போட்டி) எடுத்தார். இவரது அனுபவம் கைகொடுத்தால், பெங்களூரு வெற்றியுடன் தொடரை துவக்கலாம். அதிரடிக்கு பில் சால்ட். படிக்கல், குர்ணால் பாண்ட்யா, லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், உள்ளனர். பந்துவீச்சில் புவனேஷ்வர், ஹேசல்வுட் மிரட்டலாம்.
இந்திய வீரர்களான கோலி-வருண் சக்ரவர்த்தி இம்முறை நேருக்குநேர் மோத இருப்பதைகாண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இது குறித்து வருண் சக்ரவர்த்தி கூறுகையில், ''கோலிக்கு எதிராக விளையாட ஆர்வமாக உள்ளன். கடந்த காலங்களில் எனது பந்துவீச்சை சிறப்பாக சமாளித்து ரன் எடுத்துள்ளார். அவருக்கு எதிராக திறமையாக பந்துவீச முயற்சிப்பேன்,'' என்றார்.