ஹோட்டல் ஊழியர் பையில் கையெறி குண்டு பறிமுதல்
ஹோட்டல் ஊழியர் பையில் கையெறி குண்டு பறிமுதல்
ஹோட்டல் ஊழியர் பையில் கையெறி குண்டு பறிமுதல்
ADDED : மார் 22, 2025 05:47 AM

சம்பிகேஹள்ளி : ஹோட்டல் ஊழியர் பையில் இருந்து கையெறி குண்டு பறிமுதல் செய்யப்பட்டது. அவரை கைது செய்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு சம்பிகேஹள்ளி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில், கடந்த 19ம் தேதி அப்துல் ரகுமான் என்பவர், சப்ளையர் வேலைக்கு சேர்ந்தார்.
வேலைக்கு சேர்ந்த அன்றே, ஆதார் அட்டை நகலை கொடுக்கும்படி, ஹோட்டல் உரிமையாளர் கேட்டார்.
'வீட்டில் இருக்கிறது எடுத்து வருகிறேன்' என்று அப்துல் ரகுமான் கூறினார். ஆனால், நேற்று வரை அவர் எடுத்து வரவில்லை.
அவர் கொண்டு வந்த பை மீது ஹோட்டல் ஊழியர்களுக்கு சந்தேகம் வலுத்தது. நேற்று காலையில் ஹோட்டல் ஊழியர்கள், அப்துல் ரகுமானின் பையை சோதனையிட்டனர்.
பைக்குள் கையெறி குண்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். சம்பிகேஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அங்கு வந்த போலீசார், கையெறி குண்டை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அப்துல் ரகுமான், சம்பிகேஹள்ளி அருகே பெல்லஹள்ளியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
“இது கையெறி குண்டு என்றே எனக்கு தெரியாது. சாலையோரமாக கிடந்தது. ஏதோ வித்தியாசமாக உள்ளதே என்று நினைத்து எடுத்து வந்தேன்,” என, போலீசாரிடம், அப்துல் ரகுமான் கூறி உள்ளார்.
ஆனால், அவரை போலீசார் நம்பவில்லை. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட கையெறி குண்டு, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.